தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிக்கு வாய்ப்பில்லை

2 mins read
25172d53-d3c3-4317-914e-e6b6584070a4
தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க இயலாத நிலை உருவாகி இருக்கிறது. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க இயலாத நிலை உருவாகி இருக்கிறது.

இந்தியாவின் தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவப் பட்டப்படிப்பு நிர்வாக சபை, புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்துகிறது.

அதன் விளைவாக தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதும் எம்பிபிஎஸ் படிப்பிற்கான இடங்களை மேலும் அதிகமாக்குவதும் சிரமமாகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் இப்போது செயல்படும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஒவ்வொன்றிலும் 150க்கும் மேற்பட்ட மாணவர்களைச் சேர்க்க இயலாது என்பது தெரியவந்துள்ளது.

இந்திய அரசிதழில் ஆகஸ்ட் 16ஆம் தேதி பல விவரங்கள் வெளியிடப்பட்டன.

புதிய மருத்துவக் கல்வி நிலையங்களில் இளநிலை பட்டப்படிப்புக்கான வழிகாட்டி நெறிமுறைகள்; புதிய மருத்துவப் படிப்புகளைத் தொடங்குவது; இப்போது உள்ள படிப்புகளுக்கான இடங்களை அதிகமாக்குவது; மதிப்பீட்டு தரவரிசை ஆகியவை தொடர்பிலான விதிமுறைகள் அதில் இடம்பெற்று இருக்கின்றன.

அதன்படி மத்திய அரசாங்கம் இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

அதாவது, மருத்துவக் கல்லூரியில் மொத்த எம்பிபிஎஸ் இடங்களுக்கான வரம்பு 150 என்று மத்திய அரசு நிர்ணயித்து உள்ளது.

மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் 10 லட்சம் மக்களுக்கு 100 எம்பிபிஎஸ் இடங்கள் என்ற விகிதத்தை மருத்துவக் கல்லூரிகள் கடைப்பிடிக்க வேண்டும் என்பது இரண்டாவது முடிவு.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே 70க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் 10,000 பேருக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள்.

ஆகையால் தமிழ்நாடு மேலும் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க விண்ணப்பிக்க இயலாது. தமிழ்நாட்டின் மக்கள் தொகை ஏறக்குறைய எட்டு கோடி என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் தங்களைப் பதிந்து கொண்டு இருக்கின்ற எம்பிபிஎஸ் மருத்துவர்களின் எண்ணிக்கை 1.8 லட்சத்திற்கும் அதிகம். அவர்களில் 1.5 லட்சம் பேர் இன்னமும் தொழில் நடத்துகிறார்கள்.

மத்திய அரசு பரிந்துரைத்துள்ள விகிதம் 1:1000 ஆகும். அதாவது 1,000 பேருக்கு ஒரு மருத்துவர்.

ஆனால் தமிழ்நாட்டில் ஏற்கெனவே 600 பேருக்கு ஒரு எம்பிபிஎஸ் மருத்துவர் இருக்கிறார் என்று தமிழ்நாட்டு அரசாங்க மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் கே செந்தில் தெரிவித்தார்.

அதோடு, தமிழகத்தில் மக்கள் தொகை குறைகிறது. அடுத்த பத்து ஆண்டுகளில் 350 பேருக்கு ஒரு மருத்துவர் இருப்பார்.

ஒவ்வோர் ஆண்டும் 10,000 எம்பிபிஸ் மருத்துவர்களும் 1,500 வெளி மருத்துவப் பட்டதாரிகளும் தொழில் நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பிப்பார்கள் என்பதே காரணம் என்று அவர் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்
மருத்துவம்