நாடாளுமன்ற தொகுதிகள் குறைந்துவிடும்: தமிழ்நாடு அச்சம்

நாடாளுமன்ற தொகுதிகள் குறைந்துவிடும்: தமிழ்நாடு அச்சம்

2 mins read
0966377e-fc13-49ac-b29d-41bdc714da8e
நாடாளுமன்ற தொகுதிகளுக்கான எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு தென்னிந்திய மாநிலங்கள் 24 தொகுதிகளை இழந்துவிடும் என்று தெரிவிக்கப்படுகிறது. - படம்: தமிழக ஊடகம் 

புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றம் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றி இருக்கிறது.

இதனையடுத்து தென்னிந்திய மாநிலங்களின் எதிர்த்தரப்புகளிடையே ஓர் அச்சம் மறுபடியும் தலையெடுத்து இருக்கிறது.

நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்று அந்தக் கட்சிகள் கவலை தெரிவித்து இருக்கின்றன.

மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படும் என்பதால், தென்னிந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக் குறைந்துவிடும் என்று அந்தக் கட்சிகள் தெரிவித்து உள்ளன.

வட இந்தியாவுடன் ஒப்பிடுகையில் தென்னிந்தியாவில் பல மாநிலங்களின் மக்கள்தொகை குறைந்துவருவது குறிப்பிடத்தக்கது.

மக்களவையில் அந்த மசோதா தொடர்பான விவாதத்தில் புதன்கிழமை கலந்துகொண்டு பேசிய திமுக உறுப்பினர் கனிமொழி, மக்கள்தொகை அடிப்படையில் தேர்தல் தொகுதி எல்லைகள் வரையறுக்கப்பட்டால் தென்னிந்திய மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக் குறைந்துவிடும் என்று பேசினார்.

தலைக்கு மேலே கத்தி தொங்குவதைப் போன்ற ஒரு நிலை உருவாக்கிவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா இந்திய நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றங்களிலும் 33 விழுக்காட்டு இடத்தை பெண்களுக்கு ஒதுக்க வகை செய்கிறது.

இருந்தாலும் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளுக்கான எல்லை நிர்ணய நடைமுறை முடிவடைந்த பிறகுதான் அந்த மசோதா நடைமுறைக்கு வரும்.

தொகுதிகளை வரையறுப்பதற்கு முன்பாக அரசாங்கம் மக்கள்தொகை கணக்கீட்டை நடத்த வேண்டும்.

இந்தக் கணக்கீடு 2026க்குப் பிறகுதான் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் நிர்ணயிக்கப்பட்டால் தமிழ்நாடு, கேரளாவில் 16 எம்பி தொகுதிகள் இல்லாமல் போய்விடும் என்பது தெரியவந்துள்ளது.

மொத்தமாக தென்னிந்திய மாநிலங்களில் 24 தொகுதிகள் போய்விடும் என்றும் அதேவேளையில், வட இந்தியாவில் 32 தொகுதிகள் அதிகமாகும் என்றும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
நாடாளுமன்ற உறுப்பினர்