செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
6c36deee-b2f2-4f66-bef3-6ad2ffb567fe
புதுடெல்லியில் சென்ற ஆண்டு தீபாவளியின்போது தடையை மீறி மக்கள் பட்டாசு வெடித்ததால் பண்டிகை ஒரே புகை மண்டலமாக மாறியது.   - படம்: இந்திய ஊடகம்

கணக்கெடுப்பு நடத்துக

புதுடெல்லி: இந்தியாவில் நாடு தழுவிய வகையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி வலியுறுத்திக் கூறினார்.

90 செயலாளர்களில் மூன்று பேர் மட்டுமே ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள். வெறும் 5 விழுக்காட்டு மக்கள் எஞ்சிய 95 விழுக்காட்டு மக்களுக்குச் சட்டங்களை உருவாக்குகிறார்கள்.

ஆகையால், ஓபிசி இடஒதுக்கீடு கட்டாயம் வேண்டும் என்ற அவர் வலியுறுத்தினார்.

மகளிர் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த 10 ஆண்டுகள் கூட ஆகலாம். அந்த ஏற்பாடு நடைமுறைக்கு வராமலும் போகக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது என்று அவர் கூறினார்.

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்

புதுடெல்லி: தீபாவளி பண்டிகையின்போது இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

அதுவும் சுற்றுச்சூழலைப் பாதிக்காத பட்டாசுகளை மட்டுமே வெடிக்கலாம் என்று அது தெரிவித்து உள்ளது.

இந்த ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளியின்போது சரவெடிகளுக்கும் பேரியம் என்ற மூலப் பொருளைக் கொண்டு தயாரிக்கப்படும் பட்டாசுகளுக்கும் அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதை விசாரித்த நீதிமன்றம் இரண்டு மணி நேரம் மட்டுமே தீபாவளியின்போது பட்டாசு வெடிக்கலாம். அதுவும் பசுமை பட்டாசுகளைத்தான் வெடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

தரமற்ற 48 மருந்துகள்

புதுடெல்லி: இந்தியாவில் மருந்து தயாரிப்பு நிறுவனங்களிலும் விற்பனைக் கூடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 48 வகையான மருந்துகள் தரமற்றவை என்பது கண்டறியப்பட்டு உள்ளது.

இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் இவ்வாறு அறிவித்து உள்ளது.

தரமற்ற மருந்துகள் பெரும்பாலும் குஜராத், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தயாரிக்கப்படுபவை.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து மருந்து, மாத்திரைகளும் மத்திய, மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன.

அந்த ஆய்வுகளின்போது போலியான மருந்துகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கடந்த மாதத்தில் மட்டும் 1,166 மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் 48 மருந்துகள் தரமற்றவை என்பது தெரியவந்தது.

குறிப்புச் சொற்கள்