புதுடெல்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது நாடாளுமன்ற வரலாற்றில் பொன்னான தருணம் என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் புதன்கிழமை நிறைவேறியது.
“மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறுவதற்கு அனைத்து கட்சிகளைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் முழு மனத்துடன் ஆதரவளித்துள்ளனர். இதற்காக, இந்த அவையின் தலைவர் என்ற முறையில் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்றார் பிரதமர் மோடி.
வானதியை செல்லமாகக் கண்டித்த மோடி
பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை புதுடெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு வருகை அளித்தார்.
அப்போது, பாஜக மகளிர் அணி சார்பில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. பலரும் மோடி வாழ்க என்று உரக்கக் குரல் கொடுத்தனர்.
அப்போது தமிழகத்தைச் சேர்ந்த எம்எல்ஏவும் பாஜகவின் தேசிய மகளிரணித் தலைவியாகவும் உள்ள வானதி சீனிவாசன், பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற முயன்றார்.
அதைக் கண்டு திடுக்கிட்ட பிரதமர் மோடி, பின்புறமாக நகர்ந்துகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
‘‘என்ன இது காலில் விழுவது? அப்படியெல்லாம் செய்யக்கூடாது. காலில் விழக்கூடாது,’’ என்று வானதியை செல்லமாகக் கடிந்துகொண்டார்.

