மணிப்பூரில் மீண்டும் இணையச்சேவை

மணிப்பூரில் மீண்டும் இணையச்சேவை

2 mins read
4f8be1ae-82ab-4d11-b155-94582463bbd9
மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங் - படம்: பிரேன் சிங்/ஃபேஸ்புக்

இம்பால்: மணிப்பூரில் சனிக்கிழமை (செப். 23) முதல் இணையச் சேவை வழக்கநிலைக்குத் திரும்பும் என்று மாநில முதல்வர் என். பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த மே 3ஆம் தேதி அங்கு இனவாத மோதலை அடுத்து வன்முறை வெடித்ததால் இணையச் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது.

செய்தியாளர் கூட்டத்தில் மணிப்பூர் முதல்வர் இதனைத் தெரிவித்தார்.

“பொய்த்தகவல், பிரசாரம், வெறுப்பைத் தூண்டும் பேச்சு ஆகியவை பரவுவதைத் தடுக்கும் நோக்கில் அரசாங்கம் கைத்தொலைபேசிகளுக்கான இணையச் சேவையை ரத்து செய்தது.

“தற்போது நிலைமை மேம்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் அச்சேவை வழக்கநிலைக்குத் திரும்புகிறது,” என்று அவர் கூறினார்.

இவ்வேளையில், சட்டவிரோதக் குடியேறிகள் பிரச்சினையை அரசாங்கம் தொடர்ந்து சமாளிக்கும் என்று கூறிய முதல்வர், இந்திய-மியன்மார் எல்லையில் வேலி அமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

ஒன்றிய உள்துறை அமைச்சு மணிப்பூரில் அனைத்துலக எல்லைப் பகுதியில் 60 கி.மீ. தொலைவிற்கு வேலி அமைக்க நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த எல்லைக்கு அருகே வசிக்கும் மக்கள் தடையின்றி எல்லையைக் கடக்க வகைசெய்யும் ஒப்பந்தத்தை ரத்துசெய்யும்படி முதல்வர் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த ஒப்பந்தத்தின்கீழ், எல்லையின் இருபுறமும் ஏறத்தாழ 16 கிலோமீட்டர் தொலைவு வரை செல்வதற்கு உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தேவை இல்லை.

மாநிலத்தின் தற்போதைய நிலைக்கு, முந்தைய அரசாங்கங்கள் கொள்கைகளைச் சரியாகத் திட்டமிடாததே காரணம் என்று முதல்வர் சிங் கூறினார்.

பாதுகாப்புப் படையினர் எல்லையில் பணியில் ஈடுபடுவதற்குப் பதிலாக, எல்லைக்கருகே ஏறக்குறைய 15 கி.மீ. உள்ளடங்கி, இந்தியப் பகுதியில் பணியமர்த்தப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.

நாடளாவிய ஆய்வில் மணிப்பூர் மாநில இளையர்களிடையே போதைப் புழக்கம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது என்று கூறிய அவர், 2018ல் அமல்படுத்தப்பட்ட போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்றார்.

மணிப்பூரில் மே மாதம் மூண்ட கலவரத்தைத் தொடர்ந்து 175க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

குறிப்புச் சொற்கள்