புதுடெல்லி: காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கு விவகாரத்தில் அமெரிக்கா புதுடெல்லிக்கே ஆதரவு தெரிவிக்கும் என்று அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனின் முன்னாள் அதிகாரி ஒருவர் கருத்துரைத்துள்ளார்.
‘யானையுடன் எறும்பு மோதுவதுபோல் இந்தியாவுடன் கனடா மோதுகிறது,’ என்று மைக்கேல் ரூபின் எனும் அந்த முன்னாள் அதிகாரி கூறியுள்ளார்.
“கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் இந்தியாவைக் காட்டிலும் கனடாவுக்குத்தான் பெரிய ஆபத்துக்கு வழிவகுத்துள்ளது. இந்த விவகாரத்தில் யாரை ஆதரிப்பது என்ற சூழலை அமெரிக்கா எதிர்கொண்டால், கண்டிப்பாக இந்தியாவைத்தான் தேர்வு செய்யும். கனடாவைவிட இந்தியாவுடனான உறவையே அமெரிக்கா முக்கியமானதாகக் கருதுகிறது,” என்றார் அவர்.
மேலும், “இந்தியாமீது குற்றம்சாட்டி ட்ரூடோ மிகப் பெரிய தவறிழைத்துவிட்டார் என்றே கருதுகிறேன். அதை நிரூபிக்க அவரால் இயலவில்லை. அதற்கான ஆதாரங்கள் அவரிடம் இல்லை. ஒரு பயங்கரவாதிக்கு ஆதரவு கொடுத்தது குறித்து விளக்கம் தரவேண்டிய கட்டாயத்தில் ட்ரூடோ அரசு இருக்கிறது,” என்று மைக்கேல் ரூபின் கூறியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

