தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வயநாடு தொகுதியில் ராகுல் போட்டியிட கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு

2 mins read
1da92875-61a6-42e5-a458-84eca7a43ea8
வயநாடு தொகுதியை ஏன் கம்யூனிஸ்ட் கட்சி விட்டுக் கொடுக்கக் கூடாது என தொண்டர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி.

ஆனால் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சி, ராகுல் காந்தி அங்கு போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.

வருகிற நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர் அங்கு போட்டியிட முடிவு செய்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் தலைமையில் இண்டியா என்ற கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த முறை வயநாடு தொகுதியை காங்கிரஸ் தங்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது.

இதனால் வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டாம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுக்க திட்டமிட்டுள்ளது.

மேலும் ராகுல்காந்தி அமேதி தொகுதியில் பாஜகவை எதிர்த்து களம் இறங்கவேண்டும் என விரும்புவதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்து உள்ளன.

டெல்லியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைமை கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்த கோரிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரளப் பிரிவு அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் தலைமைக்கு தெரிவிக்கும்.

இண்டியா கூட்டணியில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகப் போட்டியிடுவது எதிர்மறையாகக் கருதப்படலாம் என்று அந்த கட்சி கூறுகிறது.

ஆனால் ஏன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வயநாடு தொகுதியை விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற கேள்வி எழுந்துள்ளது.

வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றதிலிருந்து ராகுல் காந்தி அத்தொகுதியில் தனி அக்கறை செலுத்தி வருகிறார். இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராகுலிடமிருந்து அவரது தொகுதியை பறிப்பது முறையானது அல்ல என தொண்டர்கள் சிலர் கூறியுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், “எங்கள் வேட்பாளர்கள் மற்றும் தொகுதிகள் குறித்து கட்சியின் மத்திய தேர்தல் குழுதான் இறுதி முடிவு எடுக்கும்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்