திருப்பதி கோயிலின் மின்சாரப் பேருந்து திருட்டு

1 mins read
ee442743-a534-44c4-bce3-dfeb7b906292
சனிக்கிழமை பின்னிரவு களவுபோன திருப்பதி ஆலய நிர்வாகத்துக்குச் சொந்தமான மின்சாரப் பேருந்தை காவல்துறை அதிகாரிகள் மீட்டனர். - படம்: ஊடகம்

திருப்பதி: திருப்பதியில் சனிக்கிழமை இரவு இலவசப் பேருந்துகள், பேருந்து நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. ஓட்டுநர் அருகே உள்ள ஓய்வு அறையில் உறங்கிக் கொண்டு இருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3:30 மணிக்கு வந்த ஒருவர் மின்சாரப் பேருந்தைத் திருடிக் கொண்டு சென்றார்.

திருப்பதி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நாயுடு பேட்டை என்ற இடத்தில் பேருந்து சென்ற போது பேட்டரியில் இருந்த மின்சாரம் தீர்ந்துபோனது. இதனால் செய்வது அறியாது தவித்த மர்மநபர் பேருந்து அங்கேயே நிறுத்திவிட்டு தப்பிச் சென்றார். ஓய்வு அறையில் தூங்கிக் கொண்டு இருந்த பேருந்து ஓட்டுநர், தான் நிறுத்தி வைத்திருந்த பேருந்து காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து திருப்பதி ஆலய நிர்வாக அதிகாரிகள் பேருந்தில் பொருத்தப்பட்டு இருந்த ஜிபிஆர்எஸ் கருவியை ஆராய்ந்தபோது பேருந்து நாயுடு பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து காவல்துறையின் உதவியுடன் நாயுடு பேட்டைக்கு சென்ற ஆலய நிர்வாக அதிகாரிகள் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த பேருந்தை மீட்டு திருமலைக்கு கொண்டு வந்தனர். மின்சாரப் பேருந்து திருட்டு போனது சம்பந்தமாக திருப்பதி ஆலய வாரியத்தின் போக்குவரத்து அதிகாரி சேஷாத்திரி ரெட்டி பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.