சந்திரபாபு நாயுடுக்கு காவல் நீட்டிப்பு

1 mins read
ee842cdf-0802-452b-892b-98fd575255a6
சிறையில் காலத்தைத் தள்ளி வரும் சந்திரபாபு நாயுடு. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

அமராவதி: ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசக் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுக்கு காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊழல் வழக்கில் விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப் படுத்தப்பட்டார்.

அவரை 14 நாள்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

சிஐடி அதிகாரிகளின் மனுத்தாக்கலின்படி அவரை மேலும் இரண்டு நாள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதையடுத்து ஞாயிறு 2வது நாளாக ராஜமுந்திரி சிறையில் வைத்து சிஐடி அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பித்த விசாரணை மாலை 5 மணி வரை தொடர்ந்தது.

ஊழல் தொடர்பான கேள்விகளைக் கேட்டு அதிகாரிகள் அவரிடம் விடாமல் விசாரித்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ஒரு மணி நேர உணவு இடைவேளையின்போது தனது இரண்டு வழக்கறிஞர்களுடன் அவர் காரசார விவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

விசாரணை அனைத்தும் காணொளியாகப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைக்கு பின்னர் காணொளி அழைப்பு மூலம் விஜயவாடா நீதிபதி முன்பு சந்திரபாபு நாயுடு முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இந்த விசாரணையில் சந்திரபாபு நாயுடுக்கு அக்டோபர் 5ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து விஜயவாடா நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து ராஜமுந்திரி சிறையில் அவரை காவல்துறை கண்காணித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்