நாடு முழுவதும் தூய்மைப்பணி;பொதுமக்களுக்கு மோடி அழைப்பு

நாடு முழுவதும் தூய்மைப்பணி;பொதுமக்களுக்கு மோடி அழைப்பு

2 mins read
b3e87000-5053-404a-b203-c6e161f2a1f6
மனதின் குரல் நிகழ்ச்சி வழியாக பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இம்மாதம் 15ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 2ஆம் தேதி வரை ‘சுகாதார சேவை’ என்ற பெயரில் நாடு முழுவதும் தூய்மைப்பணி நடந்து வருகிறது.

மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி, இந்த இயக்கம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, அக்டோபர் 1ஆம் தேதி காலை 10 மணிக்கு நாடு முழுவதும் பொது இடங்களில் மெகா தூய்மைப்பணி மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், பொதுமக்கள் ஒவ்வொருவரும் ஒரு மணி நேரம் ஒதுக்கி பங்கேற்குமாறு பிரதமர் மோடி ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் வழியாக அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ள மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சு, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தனித்துவமான அழைப்பு விடுத்துள்ளார். அக்டோபர் 1ஆம் தேதி காலை 10 மணிக்கு மெகா தூய்மைப்பணி நடைபெறும். நாடு முழுவதும் சந்தைகள் உள்ள பகுதிகள், ரயில் தண்டவாளங்கள், நீர்நிலைகள், சுற்றுலாத் தலங்கள், மத வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தூய்மைப்பணி நடைபெறும் என்று தெரிவித்தது.

“சமூகத்தின் அனைத்து தரப்பினரும் அதில் பங்கேற்க வேண்டும். ஒவ்வொரு பேரூராட்சி, ஊராட்சிகள், சிவில் விமானப் போக்குவரத்து, ரயில்வே, தகவல் தொழில்நுட்பம் போன்ற மத்திய அரசு துறைகள், பொது நிறுவனங்கள் ஆகியவை தூய்மைப்பணிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நல சங்கங்கள், தனியார் அமைப்புகள் போன்றவை தூய்மைப்பணிகளை மேற்கொள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் இணையத்தளங்களில் பதிந்துகொள்ளலாம்,” என்று அறிக்கை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்