போபால்: காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சனாதன தர்மத்தை அழிக்க முயற்சி செய்து வருகின்றன. இந்தக் கட்சிகளிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காங்கிரசில் ஜனநாயகம் இல்லை. குடும்ப வாரிசு அரசியலையே அந்தக் கட்சி பின்பற்றி வருகிறது. செல்வச் செழிப்பில் பிறந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு ஏழைகளின் வலி, வேதனை தெரியவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பாரதிய ஜன சங்கத்தின் முன்னோடியான தீனதயாள் உபத்யாயாவின் பிறந்த தினம் திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி இவ்வாறு பேசினார்.
“பாஜக அளித்த வாக்குறுதிகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வறுமையை ஒழிப்போம் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. அந்த கட்சியின் ஆட்சியில் வறுமை ஒழிக்கப்படவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்தபின்னரே 13.5 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டு உள்ளனர்,” என்று மோடி கூறியுள்ளார்.
“எங்கள் ஆட்சியில் ஏழைகள், பெண்கள், நலிவுற்றோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் உட்பட அனைத்துத் தரப்பினரும் பயன் அடைந்து வருகின்றனர். எனவே, மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும்,” என்பது உறுதியாகிறது என்றார் பிரதமர் மோடி.

