மணிப்பூர்: மாயமான மாணவர்கள் சடலங்களின் புகைப்படம் இணையத்தில் பரவல்

மணிப்பூர்: மாயமான மாணவர்கள் சடலங்களின் புகைப்படம் இணையத்தில் பரவல்

1 mins read
38747caf-d3d4-41cd-99d8-88cd76405d63
காணாமல்போன மாணவர்களின் சடலங்கள் இணையத்தில் பரவி வருவதால் மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. - படம்: ஊடகம்

இம்பால்: மணிப்பூரில் இரண்டு மாணவர்களின் சடலங்களைக் காட்டும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அந்த மாணவர்கள் கடந்த ஜூலை மாதம் காணாமல் போயிருந்தனர். இந்நிலையில் அவர்களின் சடலங்களைக் காட்டும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மாநில அரசு, துரித நடவடிக்கை மூலம் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மணிப்பூர் மாநில முதல்வர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. “அதில் முடக்கப்பட்டிருந்த இணையச் சேவை பயன்பாட்டுக்குத் திறந்தவிடப்பட்ட நிலையில் காணாமல் போனவர்களின் புகைப்படங்கள் வெளிவந்துள்ளன.

“இறந்துபோன மாணவர்கள் ஹிஜாம் லின்தோயின்காம்பி (17), பிஜாம் ஹேம்ஜித் (20) என அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போது வெளியான புகைப்படம் தொடர்பாக துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகளுக்கு நிச்சயமாகக் கடுமையான தண்டனை வழங்கப்படும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“புகைப்படத்தில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ள அந்த இரண்டு மாணவர்களும் ஏதோ ஓர் ஆயுதக் குழுவின் வனப்பகுதி கூடாரத்தில் இருப்பது புலப்படுகிறது.

“அந்த மாணவர்களின் படுகொலையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து மத்திய பாதுகாப்பு அமைப்புகளுடன் மணிப்பூர் காவல்துறையினரும் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே 3-ம் தேதி மோதல் ஏற்பட்டது. 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக் கணக்கானோர் காயமடைந்தனர். 

குறிப்புச் சொற்கள்