புதுடெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவிழந்து வருகிறது. எனவே அக்கூட்டணியில் இருந்து அதிமுகவைத் தொடர்ந்து மேலும் சில கட்சிகள் உறவை முறித்துக்கொள்ளக்கூடும் என்று சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாங்கள் இண்டியா கூட்டணியை அமைத்தபோதுதான் பாஜகவினருக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்த நினைப்பே வந்தது.
“அக்கூட்டணிக்கு மோடி ஒருவரே போதும். ஆனால் இண்டியா கூட்டணி உருவானபோது அவர்கள் கூட்டணிக்கு நரேந்திர மோடி ஒருவர் மட்டும் போதுமானதாக இல்லை. அவர்களுக்கு மேலும் சில கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டது.
“தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிவசேனை (உத்தவ் தாக்கரே தரப்பு), அகாலி தளம் கட்சிகள் இப்போது இல்லை.
“இந்த இரு கட்சிகளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உண்மையான பலமான கட்சிகளாக இருந்தன.
“ஆனால் இப்போது இருக்கும் பாஜக கூட்டணி வலுவிழந்ததாகக் காணப்படுகிறது. அதிமுக மட்டுமல்ல, மேலும் சில கட்சிகளும் பாஜக கூட்டணியில் இருந்து உடையும். 2024ஆம் ஆண்டுக்குள் பாஜக காணாமல் போய்விடும்,” என்றார்.
இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல், தற்போது பாஜகவுடன் இருப்பவர்கள் எல்லோரும் கொள்கைப் பிடிப்பில்லாத சந்தர்ப்பவாதக் கூட்டணியினர் என்று விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியுள்ளது.
“தற்போது அவர்களுடன் இருப்பவர்கள் எல்லாம் கொள்கைப் பிடிப்பில்லாத சந்தர்ப்பவாத கூட்டணியினர். மகாராஷ்டிராவில் பவார் மற்றும் ஷிண்டே, வடகிழக்கு கூட்டணிக் கட்சிகள், பாஜக ஆகியவை எப்போதும் கூடாரத்தில் இருக்கும் ஒட்டகம் போன்றவை,” என்று கூறியுள்ளார்.