சண்டிகார்: ஹரியானா மாநிலத்தின் கர்னல் மாவட்டத்தில் கார் இயங்காத நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் அந்த மாநிலத்தின் முதல்வர் மனோகர் லால் கத்தார், மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டார்.
காற்று மாசு அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தும் வகையில் அங்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் கார் இயங்காத நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, செவ்வாய்க்கிழமைகளில் சாலைகளில் கார் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அலுவலகத்துக்கு வரும் அரசு ஊழியர்கள் சைக்கிள்களில் வர உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இன்று காலை வீட்டிலிருந்து கர்னல் விமான நிலையம் வரை முதல்வர் மனோகர் பைக் ஓட்டிச் சென்றார்.
விமான நிலையத்துக்கு முதல்வர் மனோகர் கத்தார் பைக்கில் செல்லும் காணொளி இணையத்தில் பரவி வருகிறது.

