காங்கிரஸ்: மணிப்பூர் முதல்வரை மாற்றினால் அமைதி திரும்பும்

காங்கிரஸ்: மணிப்பூர் முதல்வரை மாற்றினால் அமைதி திரும்பும்

2 mins read
7f201679-157e-49e7-894e-8b55d468216d
மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக வன்முறை ஆயுதம் ஏந்தப்பட்டிருப்பது வெளிப்படையாக தெரிகிறது என்று சாடியுள்ளார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே. - கோப்புப்படம்

இம்பால்: மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டுமெனில் அங்குள்ள திறமையற்ற முதல் அமைச்சரை உடனடியாக நீக்கிவிட்டு திறமையான முதல் அமைச்சரைப் பதவியில் அமர்த்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கார்கே, தனது எக்ஸ் பக்கப் பதிவில், “மணிப்பூரில் 147 நாட்களாக மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இருந்தும், நாட்டின் பிரதமர் பதவியில் இருக்கும் நரேந்திர மோடிக்கு அங்கு சென்று மக்களைப் பார்வையிட நேரம் கிடைக்கவில்லை.

மாணவர்கள் கொல்லப்பட்ட கொடூரமான படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி நாட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இந்தச் சண்டையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக வன்முறை ஆயுதம் ஏந்தப்பட்டிருப்பது வெளிப்படையாக தெரிகிறது.

அழகிய மாநிலமாக இருந்த மணிப்பூர் பாஜக ஆட்சியால் இப்போது போர்க்களமாக மாறிவிட்டது. இந்த நிலைமை தொடர்வதால் அங்குள்ள திறமையற்ற முதல்வரை உடனடியாக நீக்க வேண்டும். இதுவே அங்கு கொந்தளிப்பையும் வன்முறையையும் கட்டுப்படுத்துவதற்கான முதல் படி,” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் சிங்ஜமேய் பகுதியில் ஆர்ஏஎஃப் வீரர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் செவ்வாய்க்கிழமை மோதல் ஏற்பட்டது.

அந்த மோதலைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகை குண்டு வீசி, தடியடி நடத்தினர். இதில் காயமடைந்தவர்களில் பெரும்பாலும் மாணவர்கள் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு மேலும் பதற்றம் சூழ்ந்த நிலையே காணப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியும் மாணவர்கள் படுகொலை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் பதிவில், “இனப்படுகொலைகளில் குழந்தைகள்தான் பலிகடா ஆகிறார்கள். அவர்களை காக்க நம்மால் ஆன அனைத்தையும் செய்ய வேண்டியது நமது கடமை. கொடூர கொலை குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக மத்திய அரசு வெட்கப்பட வேண்டும்,” என்று கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்