ஹர்தீப் சிங் கொலை ஆதாரங்களை கனடாவிடம் கேட்டுள்ளோம்: இந்தியா

ஹர்தீப் சிங் கொலை ஆதாரங்களை கனடாவிடம் கேட்டுள்ளோம்: இந்தியா

2 mins read
e3d9908b-954c-4602-b9e1-a986e8cc8fbd
ஜூன் மாதம் ஹர்தீப் சிங் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையில் உரசல் நீடித்து வருகிறது. இந்நிலையில் நியூயார்க் சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

வாஷிங்டன்: காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொல்லப்பட்டது தொடர்பான குறிப்பிடத்தக்க, முறையான தகவல்களை அளித்தால் அவை ஆராயப்படும் என்று கனடாவிடம் இந்தியா தெரிவித்து உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

நியூயார்க் நகரில் நடந்த வெளியுறவு கூட்டமைப்பு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெய்சங்கரிடம் ஹர்தீப் சிங் கொலை தொடர்பாக ‘ஐந்து கண்கள்’ (Five Eyes) புலனாய்வு அமைப்புக்குள் தகவல் பரிமாறப்பட்டதா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், “நான் ஐந்து கண்கள் அமைப்பைச் சார்ந்தவர் இல்லை. நான் எஃப்பிஐ அமைப்பைச் சார்ந்தவரும் இல்லை. அதனால் நீங்கள் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்பது பொருத்தமற்றது,” என்றார்.

“கடந்த சில ஆண்டுகளாகவே கனடாவில் திட்டமிட்ட குற்றங்கள் அதுவும் குறிப்பாக பிரிவினைவாத குழுக்களால் நிகழ்த்தப்படும் குற்றங்கள் அதிகரித்துள்ளன என்பது அனைவரும் அறிந்ததுதான்.

“பிரிவினைவாதக் குழுக்களின் செயல்பாடுகள் குறித்து நாங்கள் கனடாவுக்கு நிறைய தகவல்களைக் கொடுத்துள்ளோம்.

“அதுபோல் குறிப்பிட்ட சிலரை நாடு கடத்தும்படி பட்டியல் ஒன்றையும் கொடுத்துள்ளோம். அப்படிப்பட்ட நிலைமையில் எங்களது தூதரகங்கள் தாக்கப்பட்டுள்ளன. தூதரக அதிகாரிகள் மிரட்டப்பட்டிருக்கிறார்கள்.

“இப்படியான சூழலில் எங்களுக்கு யாராவது, ஏதாவது குறிப்பிட்டுக் கொடுத்தால், அதை நாங்கள் கனடாவுடன் பொருத்திப் பார்க்க வேண்டியதில்லை.

“ஆனால், ஏதேனும் ஒரு சம்பவம் நடந்தால், யாரேனும் அதை அரசாங்க ரீதியாக குறிப்பிட்டால் இந்தியா அதனை உற்றுநோக்கும். எனவே ஹர்தீப் கொலையில் கனடா குறிப்பிட்ட ஆதாரங்களைக் கொடுக்கட்டும், நாங்கள் அதனை ஆராய்கிறோம்,” என்று ஜெய்சங்கர் தெரிவித்தார்.

காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை தொடர்பில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையில் உரசல் நீடித்து. இந்தியா வரும் கனடியர்களுக்கு விசா வழங்குவதை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

45 வயது ஹர்தீப் சிங் நிஜார், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் கடந்த ஜூன் 18ஆம் தேதி கொல்லப்பட்டார். அவர் ஒரு பிரிவினைவாதி என்று இந்தியா கடந்த 2020ஆம் ஆண்டே அறிவித்து இருந்தது.

இந்நிலையில், ஹர்தீப் சிங் கொல்லப்பட்டதில் இந்திய முகவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்திருக்கிறது என கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சில நாள்களுக்கு முன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

அதைத் தொடர்ந்து கனடாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரியை நாட்டைவிட்டு வெளியேறுமாறு கனடா உத்தரவிட்டது.

இதற்குப் பதிலடி தரும் விதமாக டெல்லியில் உள்ள கனடா தூதரை நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு இந்தியா உத்தரவிட்டது.

இரு நாடுளுக்கும் இடையிலான புகைச்சல் இன்னும் நீடிக்கிறது.

குறிப்புச் சொற்கள்