மாணவர் சடலங்கள், பதற்றம்: மணிப்பூரில் அக்.1 வரை இணையச் சேவை தடை

மாணவர் சடலங்கள், பதற்றம்: மணிப்பூரில் அக்.1 வரை இணையச் சேவை தடை

1 mins read
77c09342-cf54-4972-89d3-fba69b863ef4
செவ்வாய்க்கிழமை மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதில் 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். - படம்: ஏஎஃப்பி

இம்பால்: மணிப்பூரில் மாணவர்கள் இருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடக்கும் புகைப்படங்கள் வெளியானதையடுத்து கைப்பேசி இணையச் சேவைகள் அங்கு மீண்டும் தடை செய்யப்பட்டு உள்ளன.

அக்டோபர் 1ஆம் தேதி வரை தடை நீடிக்கும் என்று மணிப்பூர் மாநில அரசாங்கம் அறிவித்து உள்ளது.

மெய்தி இனத்தைச் சேர்ந்த இந்த மாணவர்களை குகி இனத்தைச் சேர்ந்த ஆயுதக் குழுக்கள் சுட்டுக் கொன்றதாக நம்பப்படுகிறது.

கடந்த மே மாதம் மெய்தி இன மக்களுக்கும் குகி இன மக்களுக்கும் இடையே மோதல் ஆரம்பித்து மிகப்பெரிய கலவரமாக மாறியுள்ள நிலையில் இதுவரை 200க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியதுடன் ஆயிரக்கணக்கானோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக நீடித்த கைப்பேசி இணையச் சேவைத் தடை கடந்த வாரம்தான் தளர்த்தப்பட்டது.

இந்நிலையில், காணாமற்போன மாணவர்களை சடலங்களாகக் காட்டும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து தலைநகர் இம்பாலில் வன்செயல் மூண்டது.

ஆத்திரத்துடன் சாலைகளில் ஊர்வலமாகக் கிளம்பிய மாணவர்களை நோக்கி காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். நாலாபுறமும் சிதறி ஓடிய மாணவர்கள் மீது தடியடியும் நடத்தப்பட்டது.

அதில் 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

வன்செயல்கள் மேலும் பரவாமல் தடுக்கும் நோக்கில் செவ்வாய்க்கிழமை பின்னேரத்தில் இருந்து இணையச் சேவைத் தடை மீண்டும் அமல்படுத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்