பதற்றம் நிறைந்த மாநிலமாக மணிப்பூர் அறிவிப்பு; ராணுவச் சட்டம் அமல்

2 mins read
68d034ab-8662-431d-a820-fb04309abfbf
மணிப்பூரில் காணாமல் போன மாணவர்கள் இருவரின் சடலங்கள் குறித்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்ததையடுத்து அங்கு கடந்த புதன்கிழமை மாணவர்கள் ஒன்றுதிரண்டு அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். அவர்களை காவல்துறையினர் கண்ணீர்ப் புகைகுண்டு வீசி கட்டுப்படுத்தினர். - படம்: ஏஎஃப்பி

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் நடந்துவரும் வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், 19 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளைத் தவிர்த்து மற்ற பகுதிகள் அனைத்தும் பதற்றம் நிறைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது பல பகுதிகள் பதற்றமான பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அது இப்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. பதற்றமான பகுதிகளில் ஆயுதப் படையின் சிறப்பு அதிகாரச் சட்டம் அமல்படுத்தப்படும். அது வரும் அக்டோபர் 1ஆம் தேதி 6 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்று மணிப்பூர் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆயுதப் படையின் சிறப்பு அதிகாரச் சட்டம் என்பது இந்திய ஆயுதப் படைகள் மற்றும் மாநிலப் படைகள், துணை ராணுவப் படைகளுக்கு ‘‘பதற்றமான பகுதிகள்’’ என வகைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சிறப்பு அதிகாரங்களை வழங்கும் சட்டமாகும்.

இனி, மாநிலத்தின் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக, 19 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளைத் தவிர்த்து மற்ற பகுதிகள் அனைத்திற்கும் ஆளுநரே உத்தரவுகளை பிறப்பிப்பார். இது அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் பழங்குடியினத் தகுதி வழங்கப்பட்ட விவகாரத்தில் மைத்தேயி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே நீடித்து வந்த மோதல் கடந்த மே மாதம் 3-ம் தேதி பெரும் கலவரமாக வெடித்தது. இதில் இதுவரை 180க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மைத்தேயி இனத்தை சேர்ந்த 2 மாணவர்கள் குகி இனத்தை சேர்ந்தவர்களால் கடத்தி படுகொலை செய்யப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்