நீங்கள் கடவுளுக்குத் தொண்டு செய்ய வேண்டுமா, முதலில் உயிரினங்களிடம் பாசத்தோடு, அன்போடு, கருணையோடு நடந்துகொள்ள வேண்டும் என்கிறார் திரு பழனி என்ற 70 வயது பூசாரி. கும்பகோணம் அருகே இருக்கும் ஒரு சிறிய அழகான கிராமம் பேராவூர்.
அங்கு ஒரு பெரிய காமாட்சி அம்மன் கோயில் இருக்கிறது, அதில் பரம்பரை பரம்பரையாக பூசாரியாகத் தொண்டு செய்து வரும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த திரு பழனிக்கு இரண்டு மகன்கள். இருவரும் விவசாயம் செய்கிறார்கள். கோயிலிலும் தொண்டு செய்கிறார்கள். மனைவி குடும்ப மாது.
“நான் விலைக்கு வாங்கியும் அன்பளிப்பாக பலர் கொடுத்த புறாக்களையும் வளர்க்கிறேன். ஒன்பது ஆண்டுகளாக என்னிடம் வளரும் அபி என்ற கிளி பக்தர்களை வாங்க, சாமி கும்பிடுங்கள் என்று பேசி வரவேற்று உபசரிக்கும்.
“கோயிலுக்கு வரும் பக்தர்கள் உண்மையிலேயே தங்கள் மனத்துயர்களை, சங்கடங்களை எல்லாம் மறந்து மனம் நெகிழ்ந்து விடுவார்கள்.
“பறவை மங்கலகரமாகப் பேசுவது நல்ல சகுனம் என்று அவர்களிடம் ஓர் எண்ணம் ஏற்படும்.
“கோயிலுக்கு வரும்போது இருந்ததைவிட தெளிந்த நிலையில் அவர்கள் ஆலயத்தைவிட்டுச் செல்வதைக் காணலாம்,” என்று திரு பழனி சொன்னதைக் கேட்டு நானும் அபி கிளியிடம் பேச்சுக் கொடுத்தேன்.
நான் கிளி இருந்த கூண்டு அருகே சென்றபோது அது என்னைப் பார்த்து நலமா என்று கேட்டது. அபி கிளி அருமையாக பேசுகிறது.
என்னை அறியாமலேயே நானும் அகம் மகிழ்ந்தேன். கோயிலுக்கு வெளியே பெரிய கொட்டகை போடப்பட்டு இருக்கிறது. அதில் எங்கும் புறாக்கள் அமர்ந்து இருக்கின்றன. பக்கத்தில் கூண்டுகளும் உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
பறவைகள் தண்ணீர் குடிக்க தானியங்கள் சாப்பிட வசதியாக பல இடங்களில் திரு பழனி குழியான தட்டுகளை, பாத்திரங்களை வைத்திருக்கிறார்.
புறாக்கள் அங்கும் இங்கும் பறந்து கோதுமை, கம்பு, காக்காசோளம், மக்காச்சோளம், பொட்டுக்கடலை முதலான இரைகளைத் தின்றும் தண்ணீர் குடித்தும் மகிழ்ச்சியாக வசிக்கின்றன.
கிளியும் வாழைப்பழம், கோவைப்பழம், நெல் மணிகளைச் சாப்பிட்டுக்கொண்டு பாட்டு பாடிக்கொண்டு இருந்ததைக் கண்டேன்.
திரு பழனி எங்கிருந்தோ பேச பதிலுக்கு அபியும் பேசுகிறது, அந்தச் சூழலே ரம்மியமாக இருக்கிறது. வா என்றால் புறாக்கள் பறந்து வருகின்றன.
கோயிலுக்கு வெளியே பெரிய அளவில் கூண்டு அமைக்கப்பட்டு இருக்கிறது. இரவில் விலங்குகளிடம் இருந்து தப்பிக்க பறவைகள் கூண்டுக்குள் போய்விடுகின்றன.
“மொத்தம் 15 ஜோடி புறா வளர்க்கிறேன். கும்பகோணம், காரைக்கால், குத்தாலம் போன்ற நகர்களில் இருந்து புறாக்களை வாங்கி வந்தோம். சிலர் இலவசமாகவும் கொடுத்தார்கள். ஆஸ்திரேலியாவில் வளரும் புறாவும் உள்ளது.
“லக்கி, லட்சுமி, சிங்கப் புறா போன்று புறாக்களுக்குப் பெயர் வைத்து உள்ளேன். புறாக்களைப் பொறுத்தவரை அவற்றுக்கு கண் நோய், சளி நோய், ஒரு வகை அம்மை நோய் பெரும்பாலும் பாதிக்கும்.
“அருகில் உள்ள ஊரிலேயே ஒரு மருத்துவர் இருக்கிறார். அவர் வந்து சிகிச்சை அளிப்பார்.
“புறாக்களை மாதம் ஒரு முறை குளிப்பாட்ட வேண்டும். 45 நாள்களுக்கு ஒரு முறை இரண்டு முட்டை போடும்.
“ஆண் புறாவும் பெண் புறாவும் மாறி மாறி அடை காக்கும். 18 நாள்களில் குஞ்சு பொறித்துவிடும்.
“புறாக்கள் செத்துவிட்டால் பக்கத்தில் உள்ள திடலில் உடலை ஆழமாகக் குழி தோண்டி புதைத்துவிடுவோம். மேலோட்டமாகப் புதைத்தால் பூனை, நாய்கள் தின்றுவிட்டு மோப்பம் பிடித்து கோயிலுக்கு வந்து புறாக்களைப் பிடித்துக் கொன்றுவிடும்.
“இரவு நேரத்தில் எங்கள் புறாக்கள் எல்லாம் கூண்டுக்குள் அடங்கிவிடும்,” என்று அவர் விளக்கினார்
“கோயிலுக்கு வரும் பக்தர்கள் அபி கிளியிடம் பேச்சு கொடுக்காமல் போனதே கிடையாது. வாங்க, நல்லா இருக்கீங்களா, சாமி கும்பிடுங்கள் என்று அபி நலம் விசாரிப்பாள்,” என்று திரு பழனி கூறினார்.
“எங்கள் கோயிலைப் பொறுத்தவரை பக்தி மட்டுமல்ல, பக்திக்கே அடிப்படை யான அன்பு, பாசம், கருணையைப் போதிக்கும் இடமாகவும் திகழ்கிறது.
“குறிப்பாக கோயிலுக்கு வரும் சிறார்கள் புறா, கிளியிடம் பழகி அவற்றிடம் இருந்து அன்பு, கருணையை கற்றுக்கொள்கிறார்கள்.
“பெரும்பாலானவர்கள் அவற்றைப் பின்னர் வாழ்வில் கடைபிடிப்பார்கள் என்பது நிச்சயம்.
“கோயிலுக்கு வருவோர் பல பிரச்சினைகளுடன் வருகிறார்கள். அவர்கள் கோயிலில் இந்தப் பறவை களுடன் பொழுதைக் கழிக்கும்போது நிச்சயம் கொஞ்சமாவது மனநிறைவு அடைவார்கள்.
“அதைப் பார்த்து நானும் மனநிறைவு அடைகிறேன். இதுதான் எனது லட்சியம். இப்படித்தான் என் வாழ்க்கை ஓடுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
உண்மைதான், மற்ற கோயில்களுடன் ஒப்பிடுகையில் பேராவூர் காமாட்சி அம்மன் கோயில் சூழல் வேறுபட்டு இருப்பதைக் காண முடிந்தது.
விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டபோது அபியிடம் பேச்சு கொடுத்தேன்.
போய்வாருங்கள் என்று கீச்சுக்குரலில் அபி செல்லமாக என்னிடம் சொன்னது.