அமிர்தசரஸ்: இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் அண்மையில் கடும் மழை பெய்தது. அதனால் பயிர்கள் சேதமடைந்தன.
அதற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டு விவசாயிகள் வியாழக்கிழமை போராட்டத்தில் குதித்தனர். தொடர்ந்து அவர்கள் போராடி வருகிறார்கள்.
பஞ்சாப்பில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசிடம் விவசாயிகள் முக்கியமாக மூன்று கோரிக்கைகளை முன்வைத்தனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், விவசாயக் கடன் தள்ளுபடி ஆகியவை உள்ளிட்ட கோரிக்கைகளுக்குக் குரல் கொடுத்து அவர்கள் பல்வேறு விவசாய சங்கங்களின் ஆதரவுடன் களத்தில் குதித்தனர்.
மாநிலம் முழுவதும் அமிர்தசரஸ், குர்தாஸ்பூர், ஜலந்தர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. விவசாயிகள் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து போராடினர்.
மூன்று நாட்களாக நடந்த போராட்டத்தில் பல்வேறு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

