புதுடெல்லி: இந்தியா முழுவதும் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் 9 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற தூய்மைப் பணியில் மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள் என பலதரப்பினர் பங்கேற்றனர்.
பாஜக ஆட்சியில், 2014 அக்டோபர் 2ஆம் தேதி மகாத்மா காந்தி பிறந்த நாளன்று ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அதன் 9ஆம் ஆண்டு விழா ஞாயிறுன்று கொண்டாடப்பட்டது.
கடந்த 24ஆம் தேதி 105-வது `மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வழியாகப் பேசிய பிரதமர் மோடி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 1ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நாடு தழுவிய தூய்மை இயக்கம் நடத்தப்பட உள்ளது. அதற்கு நேரம் ஒதுக்கி, தூய்மை இயக்கத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டுகிறேன் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் நாடு முழுவதும் தூய்மைப் பணிகள் நடைபெற்றன. குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடைபெற்ற தூய்மைப் பணி இயக்கத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சாலைகளில் கிடைந்த குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தினார்.
மற்றொரு மத்திய அமைச்சரான அஷ்வினி வைஷ்ணவ், ஹரியானாவின் குருகிராம் நகரில் தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.
தூய்மைப் பணியாளர்களின் சீருடையை அணிந்து குப்பைகளைப் பெருக்கி வீதியை அவர் சுத்தம் செய்தார்.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சீதாபூர் நகரில் தூய்மைப் பணியை மேற்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
அவரோடு இணைந்து ஏராளமானோர் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர்.
மும்பையில் நடைபெற்ற தூய்மை இயக்கத்தில் மகாராஷ்ட்ர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பங்கேற்று குப்பைகளை அகற்றி இடத்தை சுத்தம் செய்தார்.
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், டெல்லியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சென்னை, உத்தண்டி, நயினார்குப்பம் மீனவ கிராம மாணவர்கள், தன்னார்வலர்கள், குடியிருப்புவாசிகளுடன் தேசிய அளவிலான தூய்மை சேவை என்ற சமூகம் முன்னெடுக்கும் தூய்மைப் பிரசார இயக்கத்தில் பங்கெடுத்தார்.
ஆளுநர் ரவி தூய்மை பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.
சமூக சுற்றுப்புறத்தை சுகாதாரமாகவும் தூய்மையாகவும் வைத்திருப்பதில் அவர்கள் காட்டும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற சேவைகளை ஆளுநர் ரவி பாராட்டினார்.

