புதுடெல்லி: நீடிக்கவல்ல நிலைத்தன்மைக்கான திட்டங்களில் U$600 மில்லியன் ($824 மில்லியன்) முதலீடு செய்வதற்கான நிதியம் ஒன்றை இந்தியாவும் ஜப்பானும் இணைந்து தொடங்கி உள்ளன.
இந்த நோக்கத்தில் இந்தியாவின் தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியமும் அனைத்துலக ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கியும் கூட்டு சேர்ந்து உள்ளன.
இந்த கூட்டு நிதியத்தில் ஜப்பானின் பங்களிப்பு 51 விழுக்காடாக இருக்கும். எஞ்சிய 49 விழுக்காடு பங்களிப்பை இந்தியா மேற்கொள்ளும் என இந்திய அரசாங்க அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
இந்த இந்திய-ஜப்பானிய நிதியம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின் வாகனங்கள் மற்றும் கழிவு மேலாண்மை போன்ற நீடித்த நிலைத்தன்மை திட்டங்களில் முதலீடு செய்யும்.
பாதிப்படைந்துள்ள விநியோகத் தொடர் போன்ற பிரச்சினைகள் மற்றும் நிச்சயமற்ற உலக நிலவரங்களுக்கு இடையே இந்திய, ஜப்பானிய நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இந்திய நிதியம் கைகொடுக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

