மனைவி, மகள்களை சுட்டுக்கொன்ற காவல்துறை அதிகாரி

மனைவி, மகள்களை சுட்டுக்கொன்ற காவல்துறை அதிகாரி

படம்: இந்திய ஊடகம்

05 Oct 2023 - 5:46 pm

2 mins read

கடப்பா: ஆந்திர மாநிலத்தில் தலைமைக் காவலர் ஒருவர் மனைவி இரு மகள்களைச் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்தக் காவலர் ஆந்திர மாநிலம் கடப்பா நகர் காவல் நிலையத்தில் பணியாற்றிய வெங்கடேஷ்வரலு (வயது 55) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடப்பாவில் உள்ள கூட்டுறவு குடியிருப்பில் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்த வெங்கடேஷ்வரலு, புதன்கிழமை இரவு பணி முடிந்து வீட்டுக்குச் சென்றார்.

வீட்டுக்குள் நுழைந்ததும் தாம் வைத்து இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து மனைவியையும் மகள்களையும் வெறித்தனமாகச் சுட்டுக்கொன்றார்.

பின்னர் அதே துப்பாக்கியால் தம்மைத்தாமே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இச்சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் விரைந்து சென்ற காவல்துறையினர் நான்கு உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

வெங்கடேஷ்வரலு வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்திய போது கடிதம் ஒன்றும் சிக்கியது.

அதில், “தனிப்பட்ட காரணங்களுக்காக நான் தற்கொலை செய்து கொண்டேன். எனது சொத்துகளையும் வேலையையும் இரண்டாவது மனைவி மற்றும் மகனுக்கு கொடுங்கள்,” என்று அவர் எழுதியிருந்தார்.

இந்தக் கடிதத்தை கைப்பற்றிய காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெங்கடேஷ்வரலுவுடன் பணிபுரிந்த காவல்துறையினர் கூறுகையில், “புதன்கிழமை இரவு 11 மணி வரை வெங்கடேஷ்வரலு வேலையில் தான் இருந்தார்.

“காவல்துறை அதிகாரிகளின் துப்பாக்கிகள் அவரது பொறுப்பில் இருந்ததால், அவற்றில் ஒன்றை வீட்டிற்கு எடுத்துச் சென்று, கொலைக்கும் தற்கொலைக்கும் பயன்படுத்திவிட்டார்,” என்றனர்.

பங்குச் சந்தையில் வெங்கடேஷ்வரலு ஏராளமாக பணம் இழந்ததன் காரணமாக குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதாக சில தகவல்கள் கூறின.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்