புதுடெல்லி: இந்தியாவில் இப்போது சாலை ஓர காய்கறி வண்டியிலும் பூ விற்கும் தாய்மார்கள் கடைகளிலும் கரும்புச் சாறு பிழிந்து கொடுக்கும் சாலை ஓர வண்டிகளிலும் கிராமங்களில் செயல்படும் சிறுசிறு கடைகளிலும்கூட ரொக்கப் புழக்கம் மிகவும் குறைந்துவிட்டது.
குறிப்பாக தமிழ்நாட்டில் கிராமம் முதல் நகரம் வரை இண்டு இடுக்கு சந்து பொந்துகளிலும் செயல்படும் கடைகள் முதல் சாலை ஓர வியாபாரிகள் வரை எங்கு பார்த்தாலும் ‘பேடிஎம்’ செயலி முலம் பணம் செலுத்துவது அதிகமாகிவிட்டது.
கியூஆர் குறியீடுஒன்றை வருடி மின்னிலக்க வழியில் பணம் செலுத்தும் இந்த முறை மிகப் பிரபலமாகிவிட்டது.
இந்த ஏற்பாட்டில் புதிய வசதி ஒன்றும் சேர்க்கப்பட்டு இருக்கிறது.
ஒருவர் சாலை ஓர கையேந்தி பவனில் சாப்பிட்டதும் அல்லது சாலை ஓர காய்கறி வண்டியில் பொருள் வாங்கியதும் கியூஆர் குறியீட்டை வருடி செலுத்தும் பணம் கடைக்காரரின் கணக்கில் போய் சேர்ந்ததுமே இவ்வளவு பணம் வந்துவிட்டது என்று ஒரு சிறு கருவி ஆங்கிலத்தில் ஓங்கி குரல் கொடுக்கிறது.
கடைக்காரர் தொலைவில் இருந்தாலும் அந்தக் குரலைக் கேட்டதுமே உரிய பணம் வந்துவிட்ட நிம்மதியை அடைய முடிகிறது. குரல் ஒலிப்பது மிகவும் வசதியாக இருக்கிறது என்று அனைவரும் சொல்கிறார்கள்.

