மும்பை: மும்பை கேரெகோன் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் இரு குழந்தைகள் உட்பட ஏழு பேர் பேர் உயிரிழந்தனர்.
44 பேர் காயமடைந்துள்ளனர். சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மீட்புப் பணிகளின்போது தீக்காயங்களுடன் 46 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அதில் ஏழு பேர் பலியாகிவிட்டதாகவும் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயம் அடைந்தவர்கள் மும்பை ஹெச்பிடி மருத்துவமனை, கூப்பர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரெகோன் எம்ஜி சாலையில் உள்ள ‘ஜெய் பவானி’ ஏழு மாடிக் கட்டடத்தில் அதிகாலை 3.05 மணியளவில் தீ பிடித்துள்ளது.
கட்டடத்தின தரைத் தளத்தில் இருக்கும் வாகன நிறுத்துமிடத்தில் தீ ஏற்பட்டதாக குடியிருப்பாளர்கள் கூறினர். பின்னர் அங்கிருந்த வாகனங்களுக்கும் தரைத்தளத்தில் உள்ள கடைகளுக்கும் தீ பரவியதாகவும் அவர்கள் சொன்னதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி குறிப்பிட்டது. எனினும் தீ பற்றியதற்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
“அதிகாலை 3 மணியளவில், ஒரு மிகப்பெரிய குண்டு வெடித்தது போன்ற சப்தம் கேட்டது. சத்தம் கேட்டு அனைவரும் விழித்தோம். பதற்றத்தில் கீழே வந்து பார்த்தபோதுதான் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு, வீட்டில் இருந்த அனைவரையும் வெளியேறும்படி எச்சரிக்கை விடுத்தோம். அதற்குள் பாதி தீ பரவிவிட்டது,” என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
தீயினால் குறைந்தது 35 மோட்டார்சைக்கிள்கள், ஐந்து கார்கள் வரை எரிந்து தீக்கிரையாகி உள்ளன. விபத்து குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
“அந்தக் கட்டடம் கடந்த 2006ஆம் ஆண்டு குடிசை மாற்று திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ளது. அதில் தீத் தடுப்பு முறைகள் நிறுவப்படவில்லை. கட்டடத்தின் மின்தூக்கி மிகவும் பழையது. கடுமையான புகை கட்டடத்தில் சூழ்ந்தது. மக்கள் பல்வேறு தளங்களிலும் சிக்கிக்கொண்டனர். மொட்டை மாடியில்கூட சிக்கியிருந்தனர்.
“எட்டு தீயணைப்பு வாகனங்கள், ஐந்து ஜம்போ டேங்கர்கள், 3 தானியங்கி டர்ன் டேபிள்ஸ் உட்பட பல்வேறு நவீன உபகரணங்களையும் பயன்படுத்தி காலை 6 மணி அளவில் தீ அணைக்கப்பட்டது,” என்று தீயணைப்புத் துறை தலைமை அதிகாரி ரவீந்திர அம்புல்கேகர் கூறியுள்ளார்.
இறந்தவர்கள் குடும்பங்களுக்கு அரசு ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும். காயமடைந்தவர்களுக்கு அரசால் சிகிச்சை அளிக்கப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணத் தொகையும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

