காலக்கெடுவுக்கு முன்பே அரசதந்திரிகளை வெளியேற்றிய கனடா

காலக்கெடுவுக்கு முன்பே அரசதந்திரிகளை வெளியேற்றிய கனடா

2 mins read
c542d673-72c3-42f3-954f-6358125fdb39
இந்தியப் பிரதமர் மோடியுடன் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. கனடாவில் 21 இந்திய அரசதந்திரிகள் வேலை பார்ப்பதாகவும் இந்தியாவில் வேலை பார்க்கும் கனடா அரச தந்திரிகளின் எண்ணிக்கை 62 என்றும் தெரியவருகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்தியாவில் பணிபுரிந்து வந்த தன்னுடைய அரசதந்திரிகளில் பெரும்பாலானோரை கனடா அங்கிருந்து மீட்டுக்கொண்டு உள்ளது.

இந்தியாவில் அரசதந்திரிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்ளும்படி கனடாவை இந்தியா ஏற்கெனவே கேட்டுக்கொண்டு இருந்தது. அதற்கான காலக்கெடுவையும் இந்தியா நிர்ணயித்து இருந்தது.

அந்தக் காலக்கெடுவுக்கு முன்னதாகவே கனடா தன்னுடைய இந்திய தூதரக அதிகாரிகளில் பெரும்பாலானோரை இந்தியாவைவிட்டு வெளியேற்றிவிட்டதாக கனடாவின் தனியார் சிடிவி நியூஸ் கூறியது.

இந்தியாவில் புதுடெல்லிக்கு வெளியே செயல்பட்டு வந்த தூதரக அலுவலகங்களில் வேலை பார்த்த அரசதந்திரிகள் கோலாலம்பூருக்கு அல்லது சிங்கப்பூருக்கு இடம் மாற்றப்பட்டு இருக்கிறார்கள் என்று அந்தச் செய்தி தெரிவித்தது.

கனடாவில் சில மாதங்களுக்கு முன் சீக்கிய தீவிரவாதியான நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்டார். அந்தக் கொலையில் இந்தியா சம்பந்தப்பட்டு இருக்கிறது என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்கமாகக் குற்றம் சுமத்தினார். அதையடுத்து கனடா-இந்தியா உறவு பாதிக்கப்பட்டது.

இந்தியாவில் வேலை பார்க்கும் கனடா தூதரக அதிகாரிகளில் 40 பேரை அக்டோபர் 10ஆம் தேதிக்குள் இந்தியாவைவிட்டு வெளியேற்றிவிட வேண்டும் என்று கனடாவுக்கு இந்தியா காலக்கெடு விதித்து இருந்ததாக லண்டனில் செயல்படும் ஃபைனான்ஷியல் டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்தது.

அந்தக் காலக்கெடுவுக்குப் பிறகு தொடர்ந்து இந்தியாவிலேயே இருந்து வரும் கனடா அரசதந்திரிகளுக்கான அரசதந்திர அனுகூலங்கள் பறிக்கப்பட்டுவிடும் என்றும் இந்தியா மிரட்டி இருப்பதாகவும் அந்த நாளிதழ் கூறியது.

இதனிடையே, இது பற்றி வியாழக்கிழமை கருத்துக்கூறிய இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அரிந்தாம் பாக்சி, இந்தியாவிலும் கனடாவிலும் வேலை பார்க்கும் இருநாட்டு அரசதந்திரிகளின் எண்ணிக்கையை சமமாக ஆக்கும் ஒரு முயற்சியையொட்டி அரசதந்திரிகளைக் குறைத்துக்கொள்ளும்படி கனடாவுக்கு இந்தியா கோரிக்கை விடுத்ததாகக் கூறினார்.

கனடாவில் வேலை பார்க்கும் இந்திய அரசதந்திரிகளைவிட இந்தியாவில் வேலை பார்க்கும் கனடிய அரசதந்திரிகள் அதிகம்.

ஆகையால், அரசதந்திரிகளின் எண்ணிக்கையை இந்தியாவில் குறைத்துக்கொள்ளும்படி கனடாவை இந்தியா கேட்டுக்கொண்டதாக அவர் கூறினார்.

இதனிடையே, இந்தப் புதிய நிலவரம் பற்றி இந்திய அதிகாரிகளோ கனடா அதிகாரிகளோ அதிகாரபூர்வ கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

கனடாவில் 21 இந்திய அரசதந்திரிகள் வேலை பார்ப்பதாகவும் இந்தியாவில் வேலை பார்க்கும் கனடா அரச தந்திரிகளின் எண்ணிக்கை 62 என்றும் தெரியவருகிறது.

குறிப்புச் சொற்கள்