காலணிக்குள் படமெடுத்த பாம்பு

2 mins read
85a6dc50-d6c2-459d-bc16-b656625de144
வீட்டு வாசலில் கழற்றி வைக்கப்பட்டிருந்த பெண்ணின் காலணிக்குள் இருந்தவாறு படமெடுத்துப் பயமுறுத்தும் பாம்பு. - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்திய காட்டுவளத் துறை அதிகாரி சுசாந்த நந்தா என்பவர் அண்மையில் தனது எக்ஸ் சமூக ஊடகத்தில் காணொளிப் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், வீட்டு வாசலில் கழற்றி வைக்கப்பட்டிருந்த காலணிக்குள் இருந்து கருநாகம் ஒன்று படமெடுத்து சீறியபடி வெளிவரும் காட்சியைக் காணமுடிந்தது.

அந்தக் காணொளிப் பதிவுக்கு நகைச்சுவையுடன் கூடிய எச்சரிக்கையை வெளிப்படுத்தியிருந்தார் நந்தா. அதாவது அந்தப் பதிவுக்கு ‘புதுக் காலணி அணிய விரும்பும் கருநாகம்’ என்று தலைப்பிட்டிருந்தார்.

அத்துடன், மழைக்காலங்களில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். இதுபோன்று நாம் வாசலில் கழற்றி வைக்கும் காலணிகளுக்குள் ஊர்வன சென்று ஒளிந்துகொள்ள வாய்ப்புள்ளது. எனவே, காலணிகளைக் கழற்றி கண்ட இடங்களில் போடக்கூடாது. அவ்வாறு வெளியில் கழற்றிப்போட்ட காலணிகளை மீண்டும் அணியும்போது மிகவும் எச்சரிக்கையுடன் அதைச் சரிபார்த்து பின்னர் போடவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நந்தாவின் இந்தப் பதிவு இணையவாசிகள் பலரிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்குப் பலரும் விமர்சனங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

சில நாள்களுக்குமுன், கேரள மாநிலத்தில், தலைக்கவசம் ஒன்றில் இருந்து சிறிய கருநாகம் ஒன்று வெளியே வந்தது. திருச்சூரை சேர்ந்த சோஜன் என்ற ஆடவர் அதனை பார்த்து அதிர்ந்து போனார்.

இதன்பின் காட்டுவளத் துறைக்கு தகவல் தெரிவித்து, பாம்பு பிடிக்கும் வீரர் லிஜோ என்பவர் உதவியுடன் அதனைப் பிடித்து காட்டுக்குள் கொண்டு சென்று விட்டுள்ளனர்.

இதனால், மழைக் காலங்களில் காலணிகள், கழிவறைகள் மற்றும் சமையல் அறைகளில்கூட எப்போதும் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இணையவாசிகள் பகிர்ந்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்