தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பீகாரில் ரயில் தடம்புரண்டதில் குறைந்தது நால்வர் உயிரிழப்பு

1 mins read
1219c459-8b2a-4b1e-8936-e716538c51c8
ரயிலின் 21 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகின. - படம்: ஐஏஎன்எஸ்

புதுடெல்லி: இந்தியாவின் பீகார் மாநிலத்தில் புதன்கிழமை விரைவு ரயில் ஒன்று தடம்புரண்டதில் குறைந்தது நால்வர் உயிரிழந்தனர்; ஏறக்குறைய 100 பேர் காயமுற்றனர்.

டெல்லியில் இருந்து அசாமுக்குச் சென்றுகொண்டிருந்த வடக்கு-கிழக்கு எக்ஸ்பிரஸ் ரயிலின் 21 பெட்டிகள், பீகாரின் புக்ஸார் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு 9.35 மணியளவில் (சிங்கப்பூர் நேரப்படி நள்ளிரவு 12.05 மணி) தடம்புரண்டதாக ஈஸ்ட் சென்ட்ரல் ரயில்வேயின் பொது மேலாளர் தருண் பிரகாஷ் ராய்ட்டர்சிடம் கூறினார்.

காயமுற்ற 100 பேரில் சிலர் பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக அவர் தெரிவித்தார். ரயில் தடம்புரண்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

இந்த விபத்து காரணமாக வேறு சில பயணிகள், சரக்கு ரயில்கள் வேறு பாதைக்கு மாற்றிவிடப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.

மீட்புப் பணிகள் நடைபெறுவதாக திரு பிரகாஷ் சொன்னார். ஆனால், தடம்புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றும் பணியும் மீட்புப் பணிகளும் நிறைவுற்றதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.

“அனைத்து ரயில் பெட்டிகளும் பரிசோதிக்கப்பட்டுவிட்டன. சிறப்பு ரயில் ஒன்றுக்குப் பயணிகள் மாற்றிவிடப்படுவர்,” என்று அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, அசாம் முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த விபத்தை அரசாங்கம் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்தது.

கடந்த ஜூன் மாதம், ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த மோசமான ரயில் விபத்தில் குறைந்தது 288 பேர் உயிரிழந்தனர்.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்