தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2036 ஒலிம்பிக் போட்டிகளை ஏற்றுநடத்த இந்தியா விரும்புகிறது: மோடி

2 mins read
0a9b78eb-18d2-4bd3-9f59-de3524c693c1
2029ஆம் ஆண்டு இளையர் ஒலிம்பிக் போட்டிகளை ஏற்றுநடத்தவும் இந்தியா விரும்புவதாகப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். - படம்: ராய்ட்டர்ஸ்

மும்பை: 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை ஏற்றுநடத்த இந்தியா விரும்புவதாக அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற அனைத்துலக ஒலிம்பிக் குழுக் கூட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அவர் அவ்வாறு கூறினார்.

இந்தியா இதுவரை ஒலிம்பிக் போட்டிகளை ஏற்றுநடத்தியதில்லை. இருப்பினும் 2010ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை ஏற்றுநடத்திய அனுபவம் அதற்கு உண்டு.

“2036ல் இங்கு ஒலிம்பிக் போட்டிகளைச் சிறப்பான முறையில் ஏற்றுநடத்துவதற்கு, ஆன அனைத்து முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்ளும்.

“1.4 பில்லியன் இந்தியர்களின் நீண்டகாலக் கனவு இது. ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்தவேண்டும் என்பது அவர்களின் ஆசை,” என்று திரு மோடி கூறினார்.

“உங்கள் ஒத்துழைப்புடனும் ஆதரவுடனும் இந்தக் கனவு நனவாக வேண்டும். இந்த விவகாரத்தில், அனைத்துலக ஒலிம்பிக் குழுவின் ஆதரவு இந்தியாவிற்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன்,” என்றார் அவர்.

2024 ஒலிம்பிக் போட்டிகளை பிரான்ஸ், அதன் தலைநகர் பாரிசில் ஏற்றுநடத்தவிருக்கிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் 2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும்.

அடுத்ததாக, 2032ல் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறவிருக்கின்றன.

இந்நிலையில், 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை ஏற்றுநடத்த, இந்தோனீசியா, மெக்சிகோ, போலந்து ஆகியவை ஏற்கெனவே விருப்பம் தெரிவித்துள்ளன.

விளையாட்டுத் துறையில் வலுவாக முன்னேறியுள்ள இந்தியா, இந்த மாதம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 100க்கு மேற்பட்ட பதக்கங்களுடன் உலக அளவில் நான்காம் இடத்தைப் பெற்றுள்ளது. அவற்றில் 28, தங்கப் பதக்கங்கள்.

2021ல் தோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா ஒரு தங்கப் பதக்கத்தை வென்றது.

2028 ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டு சேர்த்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவின் கை ஓங்கியிருக்கிறது.

திரு மோடி தமது உரையில், “2029ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் இளையர் ஒலிம்பிக் போட்டிகளையும் ஏற்றுநடத்த இந்தியா விருப்பம் கொண்டுள்ளது,” என்று குறிப்பிட்டார்.

விளையாட்டு என்பது பதக்கங்களை வெல்வதற்கானது மட்டுமன்று; இதயங்களையும் வெல்லக்கூடியது என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்