மாணவி வன்கொடுமை; சிறையில் ஆசிரியர்

மாணவி வன்கொடுமை; சிறையில் ஆசிரியர்

1 mins read
dda67163-af44-4d3e-875e-90e7a63eb407
சிறையில் தள்ளப்பட்ட ஆசிரியரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

திருப்பதி: ஆந்திராவில் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் கதிரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 15 வயது மாணவியைப் பலாத்காரம் செய்த ஆசிரியர் சிறையில் தள்ளப்பட்டுள்ளார்.

அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒன்பது மாதங்களுக்கு முன்பு ஆசிரியர்கள் ஓய்வு அறைக்கு தண்ணீர் குடிக்கச் சென்றார். அப்போது அங்கிருந்த ஆசிரியர் ரெட்டி நாகைய்யா மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார் என்று மாலை மலர் தகவல் தெரிவித்தது.

இது குறித்து யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்து விடுவேன் என்று அவர் மிரட்டியிருந்தார்.

இதனால் பயந்துபோன மாணவி யாரிடமும் இது குறித்து தெரிவிக்கவில்லை.

இதற்கிடையே மாணவிக்கு கடந்த சனிக்கிழமை கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோர் மாணவியை அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மாணவியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர். இதனைக் கேட்ட மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

பிரசவத்தில் மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்தின்போது மாணவிக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவர் மேல் சிகிச்சைக்காக அனந்தபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் ரெட்டி நாகையா மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்