கர்நாடகா: பாஜகவுடன் கூட்டு சேர்வதை எதிர்த்த மஜத மாநிலத் தலைவர் இப்ராகிம் நீக்கம்

கர்நாடகா: பாஜகவுடன் கூட்டு சேர்வதை எதிர்த்த மஜத மாநிலத் தலைவர் இப்ராகிம் நீக்கம்

2 mins read
d65d1bcf-e6c6-4428-bc14-739cf1d908aa
வலமிருந்து முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவகவுடா, மஜதவின் மாநிலத் தலைவர் சி.எம். இப்ராகிம், முன்னாள் முதல்வர் குமாரசாமி. - கோப்புப்படம்: ஊடகம்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் வரும் மக்களவைத் தேர்தலில் மதச்சார்புடைய பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடும் என செப்டம்பர் மாதம் அக்கட்சித் தலைமை அறிவித்தது.

மஜத கட்சியின் அந்த முடிவுக்கு கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர்கள் உள்ளிட்ட பலர் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் பாஜகவுடனான கூட்டணியைத் தீவிரமாக எதிர்த்து வந்த மஜதவின் மாநிலத்தின் தலைவர் சி.எம்.இப்ராகிமை தேவகவுடா கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் என்.எம்.நபி, மாநில துணைத் தலைவர் சையத் சஃபி ஃபுல்லா சையத், முன்னாள் டெல்லி பொறுப்பாளர் முகமது அல்தாஃப், முன்னாள் சிறுபான்மை பிரிவு தலைவர் நசீர் ஹுசைன், முன்னாள் இளைஞர் அணி தலைவர் என்.எம். நூர் ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் மஜதவின் கர்நாடக‌ மாநிலத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சி.எம். இப்ராகிம் தனது ஆதரவாளர்களுடன் கடந்த புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பாஜகவுடன் கூட்டணி வைத்த விவகாரத்தில் குமாரசாமி, கட்சியின் விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டுள்ளார். கட்சியின் ஆட்சிமன்றக் குழு இந்த முடிவை எடுக்கவில்லை. எனவே மஜத - பாஜக கூட்டணி செல்லாது. எனது தலைமையிலான மஜத, பாஜகவுடன் கூட்டணி அமைக்கவில்லை,” என தெரிவித்தார்.

இதையடுத்து “கட்சியின் நலனுக்கு விரோதமாக செயல்பட்ட மாநிலத் தலைவர் சி.எம். இப்ராகிம் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராக குமாரசாமியை கட்சியின் ஆட்சி மன்றக் குழு தேர்வு செய்துள்ளது என்று மஜத தேசிய தலைவர் தேவகவுடா அறிவித்துள்ளார்.

இதுகுறித்துப் பேசிய முன்னாள் முதல்வர் குமாரசாமி, “சி.எம்.இப்ராகிம் என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளட்டும். அதற்கெல்லாம் பதில் சொல்வது எனது வேலையில்லை. அவரைப் பற்றி கேள்வி எழுப்பி எனது நேரத்தை வீணடிக்க வேண்டாம். வருகிற தேர்தலில் மஜத - பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும்,” என்று தெரிவித்துள்ளார்.

இதனால் மஜத கட்சியில் நிர்வாகப் பதவி வகிக்கும் பலர் பதவி விலகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஜத கட்சியில் பிளவு ஏற்பட வாய்ப்பும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்