கோழிக்கோடு: அண்மையில் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா கிருமித் தொற்று பரவியது.
அதனால் இருவர் அடுத்தடுத்து மாண்டனர். கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதனால் கேரள மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
இருப்பினும் எல்லைக்கட்டுப்பாடுகள், முகக்கவசம் அணிவது, பரிசோதனைகள் என பல சுகாதார நடவடிக்கைகள் மூலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா கிருமித்தொற்று பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டது.
இதற்கிடையே கிருமித்தொற்று எப்படி பரவியது என்பதை சுகாதார அதிகாரிகள் ஆராய்ந்தனர்.
தொற்று பாதித்த பகுதியில் உள்ள தோட்டங்களில் இருந்த வவ்வால்களின் மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்யப்பட்டன.
அவற்றில் சில வவ்வால்களுக்கு நிபா கிருமித்தொற்று இருந்தது கண்டறியப்பட்டது.
நிபா கிருமிப் பரவியதற்கு வவ்வால்கள் தான் காரணம் என்பது உறுதியாகி இருப்பதாகவும், இந்த தகவலை மத்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உறுதிப்படுத்தி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இனி வவ்வால்களிடம் இருந்து கிருமித்தொற்று பாதிப்பு ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

