குஜராத்: நவராத்திரி விழாவில் 10 பேர் மாரடைப்பால் மரணம்

1 mins read
d3ea9a94-8442-4496-bff8-c52f2b4ff5b5
படம்: - தமிழ் முரசு

அகமதாபாத்: நவராத்திரி விழாவின்போது துர்கா தேவியை மையமாக வைத்து, 9 சக்தி வடிவ தெய்வங்களைப் பாடுபொருளாகக் கொண்டு கர்பா பாடல்கள் இசைக்கப்படும். கர்பா நடனத்தைப் பாரம்பரிய உடைகளுடன் ஆண்களும் பெண்களும் இரவு முழுதும் இசைக்கு ஏற்ப ஆடுவார்கள்.

இந்நிலையில், குஜராத்தில் நடந்த நவராத்திரிக் கொண்டாட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கர்பா நடனமாடிய 10 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரோடாவைச் சேர்ந்த 13 வயது சிறுவன் கர்பா நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது திடீரென சுருண்டு விழுந்து இறந்தார். இதேபோல் அகமதாபாத்தைச் சேர்ந்த 24 வயது வாலிபரும் கர்பா நடனமாடிக் கொண்டிருந்தபோது உயிரிழந்துள்ளார். இதேபோல், மேலும் 8 உயிரிழப்புகள் குஜராத்தில் பதிவாகியுள்ளன.

நவராத்திரி தொடங்கி முதல் 6 நாட்களில் கர்பா நடனமாடிய 609 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதேபோல், மாலை 6 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மாரடைப்பு தொடர்பாக 108 ஆம்புலன்சுக்கு 521 அழைப்புகள் வந்துள்ளன.

இதையடுத்து, கர்பா நடனம் நடக்கும் இடங்களுக்கு அருகிலுள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் இருக்கவேண்டும் என குஜராத் அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், கர்பா நடன நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் மருத்துவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களை நிறுத்தி பாதுகாப்பை உறுதி செய்ய கர்பா அமைப்பாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்