வெடிகுண்டுப் புரளி; மும்பையில் அவசரமாகத் தரையிறங்கிய டெல்லி விமானம்

வெடிகுண்டுப் புரளி; மும்பையில் அவசரமாகத் தரையிறங்கிய டெல்லி விமானம்

1 mins read
96e253f1-a661-4688-8f68-a9c7d87728c2
‘ஆகாசா’ ஏர் விமானம் 185 பயணிகளுடன் புனேயில் இருந்து டெல்லிக்குச் சென்றுகொண்டிருந்த விமானத்தில் வெடிகுண்டுப் புரளி கிளம்பியதையடுத்து அந்த விமானம் மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. - கோப்புப்படம்

மும்பை: புனேயில் இருந்து டெல்லிக்குச் சென்றுகொண்டிருந்த விமானம் ஒன்று, வெடிகுண்டு இருப்பதாய் பயணி ஒருவர் கூச்சலிட்டதால் அவசரமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது.

‘ஆகாசா’ ஏர் விமானம் 185 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் நேற்று அதிகாலை புனே நகரில் இருந்து டெல்லி நோக்கிப் புறப்பட்டது.

அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தில் இருந்த அஜய் தியாகி என்ற பயணி திடீரென எழுந்து, விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூச்சல் போட்டுள்ளார். இது நடுவானில் விமானத்தில் பறந்த பயணிகளிடையே கடும் பீதியை ஏற்படுத்தியது.

இதையடுத்து விமானி விமானத்தை மும்பை விமான நிலையத்தில் இறக்க முடிவு செய்தார். இதுகுறித்து மும்பை விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்ததுடன், விமானத்தை மும்பை நோக்கி திருப்பினார். அதன்படி மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் அனைத்துலக விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

இதையடுத்து தயாராக இருந்த பாதுகாப்புப் படையினர் விமானத்தில் ஏறி தீவிரச் சோதனை மேற்கொண்டனர். ஆனால் அவர்கள் நடத்திய சோதனையில் விமானத்தில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதைத்தொடர்ந்து பயணி அஜய் தியாகியிடம் போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் புரளியை கிளப்பி பீதியை ஏற்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பயணி அஜய் தியாகியை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் பயணி அஜய் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும் கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

குறிப்புச் சொற்கள்