தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியா: கனடாவுடனான உறவு சவால்மிக்க கட்டத்தில் உள்ளது

2 mins read
783f0469-8be7-44ed-aa69-747a7694ad87
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் உள்ள கனடியத் தூதரகத்துக்கு வெளியே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட இந்தியக் காவல்துறை அதிகாரிகள். - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: கனடாவுடனான உறவு சவால்மிக்க கட்டத்தில் இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.அத்துடன் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் கனடிய அதிகாரிகளின் தலையீடு தொடர்வதாகவும் அது கூறியது.

கடந்த ஜூன் மாதம் கனடாவில் சீக்கிய பிரிவினைவாத தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தக் கொலைக்கும் இந்திய உளவுத்துறையினருக்கும் தொடர்பு உள்ளது என்று கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார். இது இந்தியாவைச் சினமூட்டியது. அந்த விவகாரத்துக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது.

“கனடாவுக்கும் எங்களுக்கும் இடையிலான உறவு சவால்மிக்க கட்டத்தில் உள்ளது. கனடாவின் குறிப்பிட்ட சில அரசியல் அம்சங்களும் அதிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் கொள்கைகளும் எங்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது,” என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.

கனடாவுடனான அரசதந்திர உறவை இந்தியா நீக்கியதை அடுத்து கடந்த வியாழக்கிழமையன்று இந்தியாவில் இருந்த தனது 41 அரசதந்திரிகளை கனடா மீட்டுக்கொண்டது.

இந்தியாவில் இருந்த கனடிய அரசதந்திரிகளுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகள் இருநாடுகளில் உள்ள மில்லியன்கணக்கானோருக்குச் சிரமத்தை ஏற்படுத்தி இருப்பதாக திரு ட்ரூடோ கூறினார்.

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் கனடா தொடர்ந்து தலையிடுவதால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக திரு ஜெயசங்கர் கூறியுள்ளார். இதுதொடர்பான விவரங்களை இந்தியா இன்னும் வெளியிடவில்லை என்றார் அவர். ஆனால் இந்தியாவின் நிலைப்பாடு நியாயமானது என்பதை மக்கள் கூடிய விரைவில் புரிந்துகொள்வர் என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, இந்தியாவின் நிலைப்பாடும் நடவடிக்கைகளும் நியாயமற்றவை என்று கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலேனி ஜோலி சாடியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்