புவனேஸ்வர்: தமிழகத்தைச் சேர்ந்த வி.கார்த்திகேய பாண்டியன் ஐஏஎஸ் ஒடிசா மாநிலத்தின் கேபினட் அமைச்சரானார். அவர் முன்னதாக ஒடிசா முதல்வர் பட்நாயக்கின் தனிச் செயலாளராகப் பதவி வகித்து வந்தார். அவர் அக்டோபர் 23ஆம் தேதி விருப்ப ஓய்வு பெற்றார்.
அதையடுத்து அம்மாநில முதல்வர் பட்நாயக் அவரை “மாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் திட்டம் மற்றும் நபின் ஒடிசா திட்டத்தின் தலைவராக நியமித்துள்ளார்.
இந்த பதவி, கேபினட் அமைச்சருக்கு இணையான பதவி. இனி, இவர் முதல்வரின் கீழ் நேரடியாகப் பணியாற்றுவார்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வி.கார்த்திகேய பாண்டியன், 2000ஆம் ஆண்டில் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றவர்.
2002ஆம் ஆண்டில் அம்மாநிலத்தின் காலாஹண்டி மாவட்டத்தில் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். பின்னர் அங்கு பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றிய பின்னர் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராகவும் அவரது வலது கரமாகவும் இருந்து வருகிறார்.
ஒடிசா அரசாங்கத்திலும், ஆளும் கட்சியான பிஜு ஜனதா தள நிர்வாகிகள் இடையேயும் நவீன் பட்நாயக்குக்கு அடுத்த இடத்தில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக கார்த்திகேய பாண்டியன் வலம் வருகிறார்.
நவீன் பட்நாயக் ஆலோசனையின் பேரிலேயே அவர் விருப்ப ஓய்வு பெற்றதாகவும், விரைவில் அவர் முழுநேர அரசியலில் ஈடுபடப்போகிறார் என்றும் கூறப்பட்டது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒடிசா சட்டமன்றத் தேர்தலிலும் அவர் போட்டியிடக்கூடும் என்றும் பிஜு ஜனதா தளம் கட்சியில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் பலரும் கருதுகின்றனர்.
அண்மையில் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பிகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரை சந்தித்தபோது கூட மூன்றாவது ஆளாக பாண்டியன் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
பாண்டியனின் ஓய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சப்தகிரி உலகா, அடுத்த தேர்தலுக்கு முன்பு ஒடிசாவின் முதல்வராக பாண்டியன் பதவியேற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறியுள்ளார்.
அரசியலில் இறங்குவதற்காகவே பாண்டியன் தனது பணியில் இருந்து விலகியுள்ளதாக ஒடிசா பாஜக தலைமைக் கொறடா மோகன் மஜி தெரிவித்துள்ளார்.
“இப்போது, அவரால் ஐஏஎஸ் முகமூடியுடன் இல்லாமல் வெளிப்படையாக அரசியலில் ஈடுபடமுடியும். இருப்பினும் அவரை ஒடிசா மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்,” என்று பாஜகவின் மஜி தெரிவித்துள்ளார்.

