தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மனைவியை இழந்த தந்தைக்கு மறுமணம் செய்துவைத்த பிள்ளைகள்

2 mins read
ca58a5b0-5c3b-4061-9b8a-823e00a048e8
 62 வயது மணமகன் ராதாகிருஷ்ண குருப், 60 வயது மணமகள் மல்லிகா குமாரி. - படம்: ஊடகம்

திருவனந்தபுரம்: மனைவியின் மரணத்திற்குப் பின் வாழ்க்கையில் பிடிப்பின்றி வாட்டத்தில் வாழ்ந்து வந்த தந்தையைப் பற்றி கவலைப்பட்ட அவரது பிள்ளைகள், 62 வயதாகும் தன் தந்தை ராதாகிருஷ்ண குருப் அவரது கடைசிக் காலத்தை தனிமையில் கழித்து வாடும் நிலை ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில் அவருக்கு ஏற்ற ஒரு பெண்ணைப் பார்த்து மணம் முடித்து வைத்துள்ளனர்.

கேரளாவின் பத்தினம்திட்டா மாவட்டத்தில் திருவல்லா அருகே உள்ள திருஏறங்காவு என்னும் ஊரில் நிகழ்ந்த இந்தத் திருமணத்தை பலரும் பாராட்டியுள்ளனர்.

திருஏறங்காவு பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேல் எழுதுபொருள்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார் ராதாகிருஷ்ண குருப்.

மனைவி மற்றும் ராஷ்மி, ரெஞ்சு என்ற மகள்கள், ரஞ்சித் என்ற மகன் ஆகியோருடன் அவர் வசித்து வந்தார். இரண்டு மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. மகன் ரஞ்சித் கொல்லத்தில் விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு ராதாகிருஷ்ண குருப்பின் மனைவி திடீரென மாரடைப்பால் இறந்துவிட்டார். மனைவியின் இழப்பால் அவர் வாழ்க்கையில் பிடிப்பின்றி காணப்பட்டார். நாளடைவில் சரியாகிவிடும் என்று நினைத்தனர் பிள்ளைகள். ஆனால், ஓராண்டுக்கு மேல் ஆகியும் அவரின் போக்கில் எவ்வித மாற்றமும் இல்லை.

இதையறிந்த மூத்த மகள் ரெஞ்சு, தன் தந்தைக்கு மறுமணம் செய்துவைக்க முடிவு செய்தார். தன் தங்கை, தம்பி, உறவினர்களுடன் கலந்துபேசினார். அதையடுத்து தன் தந்தைக்கொத்த வயதிலான மணமகளை இணையம் வழி தேடத் தொடங்கினார்.

அப்போது கணவர் இறந்துவிட்டதால் தனியாக வாழ்ந்துவரும் மல்லிகா குமாரி (60 வயது) என்பவரைப் பற்றித் தெரியவந்தது. குழந்தைகள் இன்றி தனியாக வாழ்ந்து வந்த அந்த பெண்மணி, தம் தந்தைக்குப் பொருத்தமானவராக இருப்பார் என்று ராதாகிருஷ்ண குருப்பின் பிள்ளைகள் கருதினர். பின்னர் அப்பெண்ணின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், அதுபற்றி இருவரிடமும் இரு வீட்டாரும் பேசினர். அவர்களும் திருமணம் செய்துகொள்ள சம்மதித்தனர். இதையடுத்து, ராதாகிருஷ்ண குருப்புக்கும் மல்லிகா குமாரிக்கும் கோவிலில் திருமணம் செய்து வைத்தனர் ராதாகிருஷ்ணனின் பிள்ளைகள்.

குறிப்புச் சொற்கள்