உலக அளவில் புதுடெல்லியின் காற்றுத்தரம் ஆக மோசம்

1 mins read
83ba2643-ee7f-4514-9745-b5ca346f2345
சுவிட்சர்லாந்தின் ‘ஐகியூஏர்’ நிறுவனம் கண்காணிக்கும் உலகின் 110 நகரங்களில், புதுடெல்லியில் காற்றின் தரம் ஆக மோசமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் காற்றின் தரம் மிக மோசமாக உள்ளது. உலகிலேயே ஆக அதிக நச்சுத்தன்மை நிறைந்த காற்று அங்கு பதிவாகியுள்ளது.

விளை நிலங்களைச் சுத்தம் செய்வதற்காக மூட்டப்படும் தீ, வாகனப் புகை, கட்டுமானம், நிலக்கரியைப் பயன்படுத்தும் மின்உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லியின் காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு, திங்கட்கிழமை (அக். 23) காலையில் 346ஆகப் பதிவானது.

சுவிட்சர்லாந்தின் ‘ஐகியூஏர்’ நிறுவனம் அதைத் தெரிவித்தது.

அந்நிறுவனம் உலகின் 110 நகரங்களில் காற்றின் தரத்தைக் கண்காணித்து வருகிறது. அவற்றில், புதுடெல்லியில்தான் காற்றின் தரம் ஆக மோசமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

புதுடெல்லியில் காற்றுத் தூய்மைக் கேடு, உலகச் சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் அளவைவிட கிட்டத்தட்ட 20 மடங்கு என்று கூறப்படுகிறது. இதனால் இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 5.3 ஆண்டுகள் குறைவதாக அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் மத்திய, மாநில அரசாங்கங்கள் காற்று மாசு தொடர்பில் நடவடிக்கை எடுத்தபோதும் அவற்றால் பெரிய அளவில் பலனில்லை என்பதை ஆய்வாளர்கள் சுட்டினர்.

குறிப்புச் சொற்கள்