தாய்ப்பாலூட்டியபோது மின்னல் தாக்கி பெண்ணுக்குக் காது போனது

1 mins read
ed5f65bd-31e8-4e93-bba3-3f3290a1b1ae
கோப்புப்படம் - ஏஎஃப்பி

திருச்சூர்: தன் குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் தாய் தன் இடது காதின் கேட்கும் திறனை இழந்தார்.

இச்சம்பவம் இந்தியாவின் கேரள மாநிலம், திருச்சூரில் திங்கட்கிழமை நிகழ்ந்தது.

திருச்சூரின் கல்பறம்பா பகுதியில் சுபீஷ் - ஐஸ்வர்யா இணையர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், 33 வயதான ஐஸ்வர்யா திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் தம் வீட்டிலுள்ள படுக்கையில் அமர்ந்துகொண்டு, தம்முடைய ஆறுமாதக் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டிக் கொண்டிருந்தபோது இடி மின்னல் தாக்கியது.

அதிர்ச்சியில் அவர் மயக்கமுற்றதால், அவர் கையிலிருந்த குழந்தையும் நழுவிக் கீழே விழுந்தது. நல்ல வேளையாக, குழந்தைக்குக் காயமேதும் ஏற்படவில்லை.

ஐஸ்வர்யாவிற்கு முதுகில் தீக்காயம் ஏற்பட்டது. அத்துடன், அவரது தலைமுடியும் சற்று கருகிப்போனது.

உடனே, தம் மனைவியையும் குழந்தையையும் விரைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் சுபீஷ்.

இடி விழுந்ததில் தம் வீட்டிலிருந்த மின்விசைப் பலகைகள், குமிழ்விளக்குகள், குழல்விளக்குகள் ஆகியவை வெடித்துச் சிதறின என்று சுபீஷ் கூறியதாக ‘மாத்ருபூமி’ செய்தி தெரிவித்தது.

இடி மின்னல் தாக்கியபோது சுபீஷின் மற்ற இரு குழந்தைகளும் பெற்றோரும் வீட்டிலிருந்தனர் என்றும் அவர்களில் எவரும் பாதிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது.

இடி விழுந்ததால் அருகிலிருந்த சில வீடுகளும் சேதமடைந்ததாக ‘மனோரமா’ செய்தி தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்