ஆந்திரா ‘தடியடி’ திருவிழாவில் மூவர் உயிரிழப்பு

ஆந்திரா ‘தடியடி’ திருவிழாவில் மூவர் உயிரிழப்பு

1 mins read
f212fe36-37f6-472a-a4b7-39ecdb310030
மல்லேஸ்வர சாமி கோயிலில் நடந்த தடியடித் திருவிழாவில் பக்தர்கள் மூவர் மாண்டதுடன் நூற்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: இந்திய ஊடகம்

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் ஆலூருக்கு அருகே தேவார கட்டா என்ற சிற்றூர் உள்ளது. மலைப் பகுதியில் உள்ள இவ்வூரில் புகழ்பெற்ற மல்லேஸ்வர சாமி கோயில் உள்ளது.

மல்லேஸ்வர சாமிக்கு ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் தடியடித் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

அப்போது மல்லேஸ்வர சாமி உற்சவர் சிலையை தங்களது ஊருக்குக் கொண்டுசெல்வதற்காக இரு தரப்பினராகப் பிரிந்து அவர்கள் கட்டைகளால் தாக்கிக்கொள்வது வழக்கம்.

இதனால் ஆண்டுதோறும் நடைபெறும் தடியடியில் பலர் உயிரிழப்பதும் நூற்றுக்கணக்கானோர் காயமடைவதும் நடந்து வருகிறது.

இவ்வாண்டுத் திருவிழாவில் பல கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

சாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்ற பிறகு, மல்லேஸ்வர சாமி உற்சவரை மலையிலிருந்து அடிவாரத்துக்குக் கொண்டுசென்றனர்.

பின்னர் 23 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இரு குழுக்களாகப் பிரிந்து, நள்ளிரவில் தடியடியில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். மூவர் உயிரிழந்தனர்.

வெற்றிபெற்ற தரப்பினர் மல்லேஸ்வர சாமி சிலையைத் தங்கள் சொந்த ஊருக்குக் கொண்டுசென்றனர். அடுத்த ஆண்டு அதை அவர்கள் தேவார கட்டாவிற்குக் கொண்டுவருவர்.

நூறு ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இத்திருவிழாவை நிறுத்தக் காவல்துறை மேற்கொண்ட முயற்சி பலிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்