தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகம் கையில் இந்திய தயாரிப்பு கைப்பேசிகள்: மோடி பெருமிதம்

1 mins read
f3bc920d-8dde-4fdd-9db5-143fd71949f3
புதுடெல்லியின் பிரகதி திடலில் 7வது இந்திய கைப்பேசிச்சாதன மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது. அந்த மாநாட்டைத்தொடங்கிவைத்து பிரதமர் மோடி பேசினார். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற கைப்பேசிகளை உலகம் பயன்படுத்துகிறது என இந்தியர்கள் பெருமைப்படலாம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியின் பிரகதி திடலில் 7வது இந்திய கைப்பேசி சாதன மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஜியோ, ஏர்டெல் உள்பட இந்தியாவின் முன்னணி கைப்பேசி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் உள்பட 5,000 மேற்பட்ட தொழில்துறையினர் பங்கேற்ற அந்த மாநாட்டைத்தொடங்கிவைத்து பிரதமர் மோடி பேசினார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு 100 ‘5ஜி தொழில்நுட்ப ஆய்வகங்களை’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வழங்கினார்.

இந்தியாவின் தேவை உலகின் தேவை இரண்டையும் நிறைவேற்றும் நோக்கில் 5ஜி தொழில்நுட்பப் பயன்பாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த ஆய்வகங்கள் உருவாகி உள்ளன.

கல்வி, வேளாண்மை, சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து போன்ற பல்வேறு சமூகப் பொருளியல் துறைகளில் 5ஜி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் புதுமைகள் புகுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தொழில்நுட்பம் நாள்தோறும் மாறிக்கொண்டிருக்கிறது. எதிர்காலம் என்பது இங்கே இப்போது இருப்பதுதான். 5ஜி தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவதற்காக இந்த ஆய்வகங்கள் வழங்கப்படவில்லை.

‘‘மாறாக, 6ஜி தொழில்நுட்பத்தில் நாம் முன்னணியில் திகழ வேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 6ஜி தொழில்நுட்பத்தில் இந்தியா உலகை வழிநடத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,’‘ என்று தமது உரையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்