டெல்லியில் மீண்டும் காற்றுத் தூய்மைக்கேட்டு பிரச்சினை

டெல்லியில் மீண்டும் காற்றுத் தூய்மைக்கேட்டு பிரச்சினை

2 mins read
64f086cd-f18e-4bcf-9655-e355694f7ea6
புகைமூட்டமாகக் காணப்பட்ட புதுடெல்லி. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

புதுடெல்லி: வட இந்தியாவில் ஆண்டுதோறும் குளிர்காலத்துக்கு முன்பு காற்றுத் தூய்மைக்கேட்டுப் பிரச்சினை தலைதூக்குவது வழக்கம்.

தொழில்சாலைகள், வாகனங்கள் போன்றவற்றிலிருந்து வெளியாகும் அசுத்தக் காற்று, குளிர் காற்றில் சிக்குவது அதற்குக் காரணம். அதனால் மில்லியன் கணக்கான மக்கள் காற்றுத் தூய்மைக்கேட்டால் பாதிக்கப்படுவர்.

இவ்வாண்டும் அதற்கு விதிவிலக்கல்ல.

அக்டோபர் 22ஆம் தேதியன்று இந்தியத் தலைநகர் புதுடெல்லியின் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு (ஏகியூஐ) 313ஐத் தொட்டது. இந்தக் குறியீடு, காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதைக் குறிக்கும்.

ஐந்து மாதங்களுக்கும் மேலான கால கட்டத்தில் புதுடெல்லியின் காற்றுத் தரம் இவ்வளவு மோசமாக இருந்ததில்லை.

காற்றுத் தூய்மைக்கேட்டின் அளவிற்கேற்ப நடவடிக்கை எடுப்பதற்கான கட்டமைப்பு நடப்பில் உள்ளது. அதன்கீழ் புதுடெல்லியில் இரண்டாம் நிலையிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காற்றுத் தூய்மைக்கேடு மோசமாகும்போது இரண்டாம் நிலை நடவடிக்கைகள் எடுக்கப்படும்

இதன்படி மக்கள் தங்களின் சொந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அவற்றுக்குப் பதிலாக பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்தவேண்டும்.

அதோடு, கட்டுமானத் தளங்களில் தூசி எழுவதைக் குறைக்கும் முயற்சிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அக்டோபர் 22ஆம் தேதிக்குப் பிறகு புதுடெல்லியின் காற்றுத் தரம் ஓரளவு மேம்பட்டுள்ளது. இருந்தாலும் அந்நகரின் ஏகியூஐ குறியீடு 201லிருந்து 300க்கும் பதிவாகி வந்துள்ளது.

இவ்வாண்டின் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டி தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. புதன்கிழமையன்று ஆஸ்திரேலியாவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான ஆட்டம் புதுடெல்லியில் நடந்தது. அப்போது அந்நகரின் ஏகியூஐ குறியீடு 243ஆகப் பதிவானது.

வரும் வாரங்களில் புதுடெல்லியின் காற்றுத் தரம் மேலும் குறையும் என்று அஞ்சப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்