இந்திய வீரர்கள் மாலத்தீவை விட்டு வெளியேற வேண்டி இருக்கும்; புதிய அதிபர் கூறுகிறார்

மாலத்தீவு: மாலத்தீவு முழு சுதந்திர நாடாக விரும்புகிறது. அந்த நாட்டில் உள்ள இந்திய வீரர்கள் வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்படுவார்கள் என்று நாட்டின் புதிய அதிபர் முகம்மது மூய்ஸ்சு தெரிவித்து இருக்கிறார்.

அவர் நவம்பர் 15ஆம் தேதி புதிய அதிபராகப் பதவி ஏற்கிறார்.

மாலத்தீவு பகுதியில் செல்வாக்கு செலுத்த இந்தியாவும் சீனாவும் முயன்று வரும் வேளையில், புதிய அதிபரின் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

தேர்தல் பிரசாரத்தின்போது திரு மூய்ஸ்சு காரசாரமாகப் பேசினார். மாலத்தீவு உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா தலையிட இப்போதைய அதிபர் இப்ராகிம் சாலே அனுமதித்துவிட்டார் என்று அவர் குறைகூறினார்.

மாலத்தீவில் இந்திய வீரர்களை நிறுத்தி அதன்மூலம் நாட்டின் இறையாண்மையை அவர் அடகு வைத்துவிட்டார் என்று திரு மூய்ஸ்சு காரசாரமாகப் பிரசாரம் செய்தார்.

அந்தத் தேர்தலில் திரு மூய்ஸ்சு வெற்றி பெற்றார். அவர் புளூம்பர்க் நிறுவனத்திற்கு ஒரு பேட்டி அளித்தார்.

இந்திய வீரர்களாக இருந்தாலும் சரி வேறு எந்த நாட்டு வீரர்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு மாலத்தீவில் வேலையில்லை என்று புதிய அதிபர் தெரிவித்தார்.

மாலத்தீவில் ரேடார் நிலையம் ஒன்றுக்கு இந்தியா பொறுப்பாதரவு அளித்து இருக்கிறது.

கண்காணிப்பு விமானங்களையும் அது நிர்வகித்து வருகிறது. சுமார் 70 இந்திய ராணுவ வீரர்கள் அவற்றை மாலத்தீவில் தங்கி நிர்வகித்து வருகிறார்கள்.

மாலத்தீவின் பிரத்தியேக பொருளியல் மண்டலத்தைப் பாதுகாக்க இந்திய போர்க்கப்பல்கள் உதவி வருகின்றன.

இந்த நிலையில், நாட்டின் புதிய அதிபராகப் பதவி ஏற்க உள்ள திரு மூய்ஸ்சு, இந்திய வீரர்களை மாலத்தீவில் இருந்து வெளியேற்றுவதன் தொடர்பிலான பேச்சுவார்த்தையை இந்திய அரசுடன் ஏற்கெனவே தொடங்கி இருக்கிறார்.

அந்தப் பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றிகரமான முறையில் இருப்பதாக அவர் கூறினார்.

‘‘பரஸ்பரம் நன்மை அளிக்கக்கூடிய இரு தரப்பு உறவை நாங்கள் விரும்புகிறோம். மாலத்தீவைவிட்டு வெளியேறும் இந்திய வீரர்களுக்கும் பதிலாக இதர நாடுகளைச் சேர்ந்த எந்த வீரரும் மாலத்தீவுக்கு வர அனுமதிக்கப்படமாட்டார்கள்,’’ என்று அவர் கூறினார்.

மாலத்தீவு பகுதியில் ஆதிக்கம் செலுத்த இந்தியாவும் சீனாவும் முயன்று வருகின்றன. மாலத்தீவில் அமையும் அரசாங்கம் மாறி மாறி இரு நாடுகளுக்கும் ஆதரவு அளித்து வருகிறது.

மாலத்தீவு நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் இந்தியாவும் சீனாவும் அதிக முதலீடு செய்து இருக்கின்றன. அதிகக் கடனையும் கொடுத்து இருக்கின்றன.

அனைத்து நாடுகளின் உதவியையும் ஒத்துழைப்பையும் நாங்கள் நாடுகிறோம் என்று திரு மூய்ஸ்சு கூறினார்.

திரு மூய்ஸ்சு ஐந்தாண்டுகளுக்கு முன் பதவியில் இருந்தபோது எதிர்ப்பாளர்களை நசுக்கியதாக கூறப்பட்டது. திரு மூய்ஸ்சு தலைமை வகிக்கும் கட்சி, சீனாவில் இருந்து கடன் வாங்குவதை வரவேற்று கருத்து தெரிவித்து இருக்கிறது.

மாலத்தீவில் 500,000 பேர் வசிக்கிறார்கள். அது 187க்கும் மேற்பட்ட சிறுசிறு தீவுகளை உள்ளடக்கிய நாடு.

தீவுகள் பலவற்றில் மனிதர்கள் யாரும் இல்லை. சுற்றுப்பயணிகளைக் கவரும் முக்கிய நாடுகளில் ஒன்றாக மாலத்தீவு இருக்கிறது.

இந்தியப் பெருங்கடலில் சுறுசுறுப்புமிக்க கப்பல் வழித்தடங்களின் ஊடே அது அமைந்து இருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!