28 ஆண்டுகள் நடந்த போராட்டம் வெற்றி; ஆடவருக்கு அரசு வேலை

2 mins read
7b9e4e78-5d2c-43ce-8560-ed6600154b67
அங்கூர் குப்தா என்பவர் 28 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்தி கடைசியில் வெற்றி பெற்று அஞ்சலக ஊழியர் ஆனார். - படம்: இந்திய ஊடகம் 

புதுடெல்லி: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அங்கூர் குப்தா என்பவர் அஞ்சல் நிலையத்தில் வேலைக்குச் சேர 1995ஆம் ஆண்டு விண்ணப்பித்து இருந்தார்.

அவருடைய விண்ணப்பம் தேர்ந்தெடுக்கப்பட்டது. வேலைக்கு முன் பெற வேண்டிய பயிற்சியும் அவருக்கு அளிக்கப்பட்டது.

இருந்தாலும் அவருடைய கல்வித் தகுதியைச் சுட்டிக்காட்டி பிறகு தகுதிப் பட்டியலில் இருந்து அஞ்சல்துறை நிர்வாகம் குப்தாவின் பெயரை நீக்கிவிட்டது.

அவர், தன்னைப் போல பாதிக்கப்பட்ட மற்றவர்களுடன் சேர்ந்து 1999ல் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் முறையிட்டு வெற்றியும் பெற்றார்.

ஆனால், அந்தத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து அஞ்சல் துறை 2000ஆம் ஆண்டில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

அந்த மனுவை 2017ல் அந்த உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. பிறகு அதை எதிர்த்து தாக்கலான மறு ஆய்வு மனுவையும் அலகாபாத் உயர் நீதிமன்றம் 2021ஆம் ஆண்டில் நிராகரித்துவிட்டது.

அஞ்சல்துறை அத்துடன் நின்றுவிடாமல் உச்ச நீதிமன்றத்தை நாடியது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், விண்ணப்பதாரர் ஒருவர் தகுதிப் பட்டியலில் இடம்பெற்றுவிட்டால் அவர் நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியது.

அரசமைப்புச் சட்டத்தின் 12வது பிரிவின் படி எந்தவொரு விண்ணப்பதாரரையும் காரணம் இல்லாமல் வெளியேற்றக்கூடிய அதிகாரம் இல்லை என்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

அங்கூர் குப்தாவை பல சோதனைகளுக்கு உட்படுத்தி, நேர்காணல் செய்து, தகுதி பட்டியலிலும் சேர்த்து, 1996ஆம் ஆண்டு மார்ச் 15 முதல் அவருக்குப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

ஆகையால், அவரை ஒரே மாதத்திற்குள் அஞ்சலகத்தில் பணியில் அமர்த்த வேண்டும். இருந்தாலும் 1995ஆம் ஆண்டு பணியில் சேர்க்கப்பட்டவர்களுக்கு கிடைத்த, கிடைக்கின்ற சலுகைகள், பதவி மூப்பு உரிமை ஆகியவை அவருக்கு இருக்காது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

குறிப்புச் சொற்கள்