புதுடெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா தனது நாடாளுமன்ற மறைச்சொல் தொடர்பான விவரங்களை தமது நண்பரும் தொழிலதிபருமான தர்ஷன் ஹிராநந்தனியிடம் பகிர்ந்துகொண்டதாக வெள்ளிக்கிழமையன்று ஒப்புக்கொண்டார், ஆனால் அவரிடமிருந்து பணம் வாங்கவில்லை என்று மொய்த்ரா கூறினார்.
அதானி குழுமம் மற்றும் கௌதம் அதானி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான நிஷிகாந்த் துபே மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் ஆகியோர் மொய்த்ரா மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டுகளை மொய்த்ரா மறுத்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றம் நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தி வருகிறது. இம்மாதம் 31ஆம் தேதியன்று மொய்த்ரா இக்குழுவின் முன் வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
“எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் சொந்தக் கேள்விகளைத் தட்டச்சு செய்வதில்லை. நான் தர்ஷனுக்கு எனது மறைச்சொல்லையும் அவரது அலுவலகத்தில் உள்ள ஒருவருக்கு பயனீட்டாளர் அடையாளக் குறியீட்டையும் கொடுத்தேன். கேள்விகளைத் தட்டச்சு செய்து பதிவேற்றம் செய்வதற்குக் கொடுத்தேன். கேள்விகளைப் பதிவேற்ற ஒருமுறை மறைச்சொல் தேவைப்படும். என்னுடைய ஐஃபோன் கைபேசி எண்ணுக்கு அது அனுப்பப்படும். தர்ஷன் அல்லது வேறுயாரேனும் என்னுடைய அனுமதி இல்லாமல் கேள்விகளைப் பதிவேற்ற முடியாது,” என்று மொய்த்ரா கூறினார்.

