தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 12 பேர் கைது

1 mins read
bdd8765f-9f88-41fe-ae2f-093c2619c88e
படம்: - தமிழ் முரசு

கோவில்பட்டி: மாலத்தீவு கடற்படையினரால் தூத்துக்குடி மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தைச் சேர்ந்த மைக்கேல் பாக்கியராஜ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், தூத்துக்குடி, மதுரையைச் சேர்ந்த 12 பேர் அக்டோபர் 1ஆம் தேதி தருவைகுளத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

அக்டோபர் 23ஆம் தேதி மாலத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மாலத்தீவு கடல் பகுதிக்குள் படகு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த மாலத்தீவு கடற்படையினர், 12 மீனவர்களையும் உடனடியாக கைது செய்தனர். பின்னர் மாலி துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த மீனவர்களின் உறவினர்கள், கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை தொடர்புகொண்டு, 12 மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.