தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ்நாட்டில் டோலக்கைத் தட்ட தட்ட..உத்தராகண்டில் பணம் கொட்ட கொட்ட...

4 mins read
தமிழ்நாட்டு மக்களிடம் பணமும் இருக்கிறது, நல்ல மனமும் இருக்கிறது என்கிறார் உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த திரு முகம்மது அலி, 26. தமிழகம் என்னைப் போன்ற இதர மாநில மக்களையும் வாழ வைக்கிறது என்று மகிழ்ச்சியுடன், மனநிறைவுடன் கூறுகிறார். 
fd2fa55b-eacc-4586-ae20-319250d33007
தரங்கம்பாடி அருகே உள்ள செம்பொன்னார் கோயில் என்ற பேரூரில் திரு முகம்மது அலி வாடிக்கையாளர் ஒருவரிடம் பேரம் பேசி ரூ.240க்கு ஒரு தாளக் கருவியை விற்கிறார். - படம்: எம். கே. ருஷ்யேந்திரன்
multi-img1 of 3

எம். கே. ருஷ்யேந்திரன்

இந்தியாவின் வடக்கே உள்ள உத்தராகண்ட் போன்ற மாநிலங்களில் இருந்து இளைஞர்கள் பலர் தெற்கு நோக்கி குறிப்பாக தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள்.

இந்தியாவிலேயே இரண்டாவது பணக்கார மாநிலமாகத் திகழ்கின்ற தமிழ்நாடு, அவர்களுக்குப் பணத்தை அள்ளித் தரும் மாநிலமாக மட்டுமன்றி, வந்தவர்களை வரவேற்று உபசரிக்கும் மக்களைக் கொண்ட இடமாகவும் இருக்கிறது.

“நாள் ஒன்றுக்கு தமிழ்நாட்டில் சராசரியாக ரூ.1,000 வரை சம்பாதிக்கிறேன். என்னுடைய மாநிலத்திலும் சரி, நான் பார்த்தவரை இந்தியாவின் வேறு எந்த மாநிலங்களிலும் சரி, இந்த அளவுக்குப் பொருள் ஈட்ட முடியாது,” என்கிறார் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த திரு முகம்மது அலி என்ற 26 வயது குடும்பத் தலைவர்.

திரு முகம்மது அலியின் மனைவியும் ஒரு குழந்தையும் தமிழ்நாட்டில் இருந்து சுமார் 2,800 கிமீ தொலைவில் இருக்கும் உத்தராகண்ட் மாநிலத்தில் நியோநைனிடால் என்ற நகருக்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கிறார்கள்.

திரு அலி, மாதாமாதம் சராசரியாக சுமார் ரூ.20,000ஐ தன் குடும்பத்திற்கு அனுப்பி வைக்கிறார்.

“நான் மட்டுமல்ல என்னுடைய கூட்டாளிகளும் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறோம்.

“நான் பிள்ளைகள் விளையாடும் சிறிய டோலக் இசைக் கருவியை தயாரித்து விற்கிறேன். ஆட்டுத்தோல், நூற்கண்டு, கார்ட்போர்ட் அட்டை, மூங்கில் குச்சிகளை வாங்கி அவற்றைக் கொண்டு டோலக் தயாரிக்கிறேன்.

“ஓர் ஆட்டுத் தோலைக் கொண்டு நான்கு அல்லது ஐந்து டோலக் தயாரித்துவிடலாம். ஒரு டோலக் தயாரிக்க எனக்கு சராசரியாக ரூ.60 முதல் ரூ.100 வரை செலவாகிறது.

“ஒரு டோலக்கை ரூ.200 முதல் ரூ.300 வரை விற்கிறேன். நாள் ஒன்றுக்கு எப்படியும் ரூ.600லிருந்து ரூ.1,000 வரை சம்பாதித்துவிடுகிறேன்,” என்று திரு அலி அரைகுறை ஆங்கிலத்தில் தெரிவித்தார்.

நான் அவருடன் சுமார் 30 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தேன். அதற்குள்ளாக அவர் இரண்டு டோலக்குகளை ரூ.450க்கு விற்றுவிட்டார்.

“ஓராண்டில் இரண்டு மாத காலம்தான் நான் குடும்பத்தோடு இருப்பேன். பிறகு கிளம்பிவிடுவேன். ஒவ்வொரு மாநிலமாக வந்து கடைசியில் தமிழ்நாட்டை அடைந்து தமிழ்நாட்டில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை சுற்றுவேன்.

“பல நகர்களிலும் பயன்படுத்தாத கட்டடங்களில் தங்கிக் கொள்வேன். ஹோட்டல்களில் சாப்பிடுவேன்.

“என்னைப் போலவே என் நண்பர்களும் அவரவர்களுக்குத் தெரிந்த தொழில்களைச் செய்கிறார்கள். சிலர் காற்றாடி விற்பார்கள். பொம்மைகள், துணிமணிகள், சங்கிலிகள், பூட்டு சாவி, இடுப்பு வார் (பெல்ட்), போர்வை, கைவிளக்கு (டார்ச்லைட்) போன்றவற்றை விற்கிறோம்.

“கடந்த ஒரு மாத காலமாக தமிழ்நாட்டில் இருக்கிறேன். 15 நாள்களாக நாகப்பட்டினத்தில் தங்கி டோலக்குகளைத் தயாரித்து அவற்றை விற்றுவருகிறேன்.

“இன்னும் ஒரு மாதத்தில் தமிழ்நாட்டை முடித்துக்கொண்டு கேரளா சென்று பிறகு கர்நாடகா, மகாராஷ்டிரா என்று சென்று கடைசியில் உத்தராகண்ட் போய்விடுவேன்.

“இரண்டு மாதம் குடும்பத்துடன் இருந்துவிட்டு மீண்டும் நண்பர்களோடு அடுத்த ஆண்டு இதே பயணத்தைத் தொடங்குவேன்.

“பல மாநிலங்களை, பல மக்களைச் சந்தித்து இருக்கிறேன். தமிழ்நாட்டு மக்கள் யாரையும் வேற்றுமையாகப் பார்ப்பதே கிடையாது. அவரவர் வேலையை அவரவர்கள் பார்ப்பார்கள்.

“புதிதாக யாராவது வந்தால் அவர்களை வினோதமாகப் பார்த்து அலசி ஆராயும் வேலை எல்லாம் தமிழ்நாட்டில் அவ்வளவாக இராது.

“அதோடு மட்டுமல்ல, அதிகமாக பணம் புழங்கும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால் மக்கள் தாராளமாகச் செலவிடுகிறார்கள்.

“தமிழ்நாட்டில், ரூ.200 முதல் ரூ.240 வரை தாராளமாக கொடுத்து என்னுடைய டோலக்கை வாங்கி என் குடும்பத்தை வாழ வைக்கும் மக்கள் அந்த மாநிலம் முழுவதும் பரவி இருக்கிறார்கள்.

“என்னுடைய மாநிலத்தில் இந்த அளவுக்குப் பணத்தைச் சம்பாதிக்க முடியாது. அதேபோல, இந்தியாவின் வேறு பல மாநிலங்களில் டோலக்கை இவ்வளவு விலை கொடுத்து வாங்குவோரும், தமிழ்நாட்டுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு,” என்று திரு அலி கூறினார்.

திரு அலிக்கு இந்தி மொழி மட்டும்தான் தெரியும். ஓரிரு வார்த்தைகளில் ஆங்கிலத்தில் பேசி புரிந்துகொள்கிறார்.

“தமிழ்நாடு சாப்பாடு எனக்கு மிகவும் பிடிக்கும். எங்களைப் பொறுத்தவரை இந்த மாநிலத்தில் எந்தக் குறையும் இல்லை. ஒன்றைத் தவிர. எங்கள் ஊருடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் வெப்பம் அதிகமாக இருக்கிறது,” என்று சிரித்த முகத்துடன் திரு அலி கூறினார்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்று காலங்காலமாக கூறப்படுவதுண்டு. இதற்கு கண்கூடான ஒரு சாட்சியாகத் திரு அலி தெரிந்தார்.

திரு அலியிடம் இருந்து டோலக் வாங்கிய ஒருவரை கேட்டேன்.

“பல நாள்களாக இதைத் தேடிக்கொண்டிருந்தேன். இப்போதுதான் கிடைத்தது. ரூ.240 கொடுத்து இதை வாங்கினேன். இந்த டோலக் மிகவும் இலேசாக இருக்கிறது. எளிதில் உடையாது என்று தெரிகிறது. என்னுடைய இரண்டு வயது மகனுக்கு இதை வைத்து தட்டி தட்டி அடித்து விளையாட மிகவும் பிடிக்கும்,” என்று அவர் கூறினார்.

திரு அலியின் டோலக்கை வாங்கி தமிழ்நாட்டில் குழந்தைகள் அதைத் தட்ட தட்ட, உத்தராகண்டில் திரு அலியின் குடும்பத்திற்குப் பணம் போய் கொட்ட கொட்ட, தமிழரின் வந்தாரை வாழவைக்கும் குணம் இமயமலையில் எதிரொலிக்கும்.

குறிப்புச் சொற்கள்