தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆப்பிள் எச்சரிக்கை; இந்தியா புலன்விசாரணை

2 mins read
55a284f6-a3b3-461a-8969-605a241bcbab
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் இந்தியா கைப்பேசி பேரவையின் ஏழாவது கூட்டத்தில் கலந்துகொண்டார். - படம்: இபிஏ

புதுடெல்லி: அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் அனுப்பியதாகத் தெரிவிக்கப்படும் கைப்பேசி எச்சரிக்கை பற்றி இந்திய அரசாங்கம் புலன்விசாரணையைத் தொடங்கி இருக்கிறது.

அரசாங்க ஆதரவு பெற்ற ‘‘தாக்குதல்காரர்கள்’’ கைவரிசை காட்டும் வாய்ப்பு இருப்பதாகவும் அதைக் கருத்தில்கொண்டு எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளும் படியும் இந்தியாவின் எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் பலரையும் அந்தச் செய்தி எச்சரித்தது.

இந்தியாவின் முக்கியமான அரசியல் தலைவர்களின் கைப்பேசிகளில் அந்த எச்சரிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

அதன் காரணமாக ஆளும் பாஜக அரசுக்கும் எதிர்த்தரப்புகளுக்கும் இடையில் பிரச்சினை மூண்டு இருக்கிறது.

இந்தியாவில் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் இந்தப் பிரச்சினை தலைதூக்கி இருக்கிறது.

‘‘அத்தகைய எச்சரிக்கைகளை அரசாங்கம் கடுமையாகக் கருதுகிறது.

‘‘அதற்கு அடிப்படையான மூலத்தை அரசாங்கம் கண்டுபிடிக்கும்,’’ என்று இந்தியாவின் மத்திய தொடர்பு தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

இந்தியாவின் பிரபலமான பல அரசியல் தலைவர்கள் தங்கள் ஆப்பிள் கைப்பேசிகளில் எச்சரிக்கை செய்தியைப் பார்த்ததும் அது பற்றி பெரிய அளவில் பிரச்சினைகளைக் கிளப்பினார்கள்.

மத்திய அரசாங்கம் தங்களுடைய கைப்பேசிகளில் சட்டவிரோதமாக ஊடுருவி வேவு வேலை பார்ப்பதாக அவர்கள் குற்றம் சுமத்தினார்கள்.

அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் அனுப்பிய எச்சரிக்கை செய்தியில், அரசாங்க ஆதரவு பெற்ற ஆசாமிகள் உங்களுடைய கைப்பேசியில் ஊடுருவி இருந்தால் அவர்கள் தொலைவில் இருந்தே உங்களுடைய தகவல்களையும் நீங்கள் தொடர்புகொண்ட விவரங்களையும் உங்கள் கைப்பேசியில் இருக்கக்கூடிய படங்களையும் ஒலிப்பதிவுககள் அனைத்தையும் அவர்கள் பெற்றுவிட முடியும் என்று எச்சரிக்கப்பட்டது.

‘‘இந்த எச்சரிக்கை போலி என்று தெரியக்கூடும். ஆனால், தயவு செய்து இதை அலட்சியப்படுத்திவிட வேண்டாம்,’’ என்றும் அந்த எச்சரிக்கைச் செய்தி குறிப்பிட்டது.

இதனையடுத்து மத்திய அரசுக்கும் எதிர்த்தரப்பினருக்கும் இடையில் பெரும் பிரச்சினை மூண்டு இருக்கிறது.

தங்கள் கைப்பேசிகளைச் சட்டவிரோதமாக எட்டி மத்திய அரசாங்கம் தில்லுமுல்லு வேலைகளைச் செய்யத் தொடங்கிவிட்டது என்று எதிர்த்தரப்பினர் பலரும் குறைகூறுகிறார்கள்.

எச்சரிக்கை செய்தியை பெற்றவர்களில் மேற்கு வங்காளத்தின் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர், காங்கிரஸ் கட்சி பிரமுகர் உள்ளிட்ட பலரும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்