அரவிந்த் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறையின் அழைப்பாணை சட்டவிரோதமானது

அரவிந்த் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறையின் அழைப்பாணை சட்டவிரோதமானது

2 mins read
d19c9424-7b86-4cc0-8570-af4199182daf
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: புதியு மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

அழைப்பாணை அனுப்பப்பட்டது சட்டவிரோதமானது என்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல் என்றும் முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

இருப்பினும் அமலாக்கத்துறை விசாரணைக்கு கெஜ்ரிவால் முன்னிலையாக இருப்பதாகவும் அவர் கைதுசெய்யப்படக்கூடும் என்றும் ஆம்ஆத்மி கட்சியினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இன்னொரு பக்கம் அவர் இந்த விசாரணைக்கு முன்னிலையாக மாட்டார் என்றும் மத்தியப் பிரதேசத்தின் சிங்ரோலியில் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

புதிய மதுபானக் கொள்கை ஊழல் வழக்குத் தொடர்பாக முதல்வர் கெஜ்ரிவாலிடம் கடந்த ஏப்ரல் மாதம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. அந்த விசாரணையில், அவரிடம் 56 கேள்விகள் கேட்கப்பட்டன.

அப்போது அவர், இந்த வழக்கு அரசியல் காரணங்களுக்காக வேண்டுமென்றே புனையப்பட்ட வழக்கு என்று சாடியிருந்தார். சரியாக ஆறு மாதங்களுக்குப் பின் மீண்டும் இப்போது அமலாக்கத்துறையினர், நவம்பர் 2ஆம் தேதி காலை 11 மணிக்கு முன்னிலையாகும்படி கெஜ்ரிவாலை கேட்டுக் கொண்டனர். இந்நிலையில் அவர், இது சட்டவிரோதமானது என்று அத்துறைக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

மேலும் அவர் அக்கடிதத்தில், பாஜக கேட்டுக்கொண்டதன்பேரில் வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் தனது தேர்தல் பரப்புரைக்கு முட்டுக்கட்டை போடும் நோக்கத்திலேயே இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது அரசியல் நோக்கம் கொண்டது என்பதால் அந்த அழைப்பாணையை அமலாக்கத்துறை மீட்டுக் கொள்ள வேண்டும் என்று அவர் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கெஜ்ரிவால் வியாழக்கிழமை மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலியில் நடக்கும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. அவரை அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாமல் செய்வதற்கே அவருக்கு இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

டெல்லி அமலாக்கத்துறையின் போக்கைக் கண்டித்து ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் இறங்கக்கூடும் என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமலாக்கத்துறை கட்டடம் இருக்கும் பகுதிகளில் தடுப்பு வேலிகள் போடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லி மகாத்மா காந்தியின் நினைவிடத்தின் அருகே பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய மதுபானக் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையின் விசாரணையைப் புறக்கணித்து விட்டதாகக் கூறி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஹர்ஷவர்தன், நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ்குமார் திவாரி, டெல்லி எதிர்க்கட்சித் தலைவர் ராம்வீர் சிங் பிதுரி உள்ளிட்ட பாஜகவினர் குந்தியிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்