தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனரின் ரூ.538 கோடி சொத்துகள் முடக்கம்

2 mins read
d414a1ca-d33a-4199-b498-b91ecf3ec1c6
ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல். - படம்: ஊடகம்

மும்பை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் குடும்பத்திற்குச் சொந்தமான ரூ.538 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

நரேஷ் கோயல், அவருடைய மனைவி அனிதா கோயல், மகன் நிவான் கோயல் ஆகியோருக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் உட்பட 17 சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்தியா மட்டுமன்றி, லண்டனிலும் துபாயிலும் உள்ள அவர்களது சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை குறிப்பிட்டது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 1992ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமாக வலம்வந்த ஜெட் ஏர்வேஸ் 2017ஆம் ஆண்டிற்குப் பிறகு இழப்பை எதிர்கொண்டது. இழப்பு அதிகமான நிலையில், நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலைக்கு உள்ளானது. 2019 ஏப்ரல் மாதம் ஜெட் ஏர்வேஸ் அதன் விமானச் சேவையை முழுமையாக நிறுத்தியது.

இந்நிலையில், நரேஷ் கோயலும் அவருடைய மனைவி அனிதா கோயலும் ரூ.538 கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக கனரா வங்கி அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த மே மாதம் சிபிஐ சோதனை நடத்தியது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வங்கிகளிடமிருந்து பெற்ற கடன்களை நிறுவனச் செயல்பாடுகள் சார்ந்து இல்லாமல் வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தியுள்ளது என்று தனது விசாரணையின் அடிப்படையில் சிபிஐ தெரிவித்தது.

சிபிஐ பதிந்துள்ள முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஜெட் ஏர்வேஸ்மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் விசாரணையைத் தொடங்கிய அமலாக்கத்துறை, நரேஷ் கோயல் குடும்பத்துக்குச் சொந்தமான ரூ.538 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியுள்ளது.

நரேஷ் கோயல் வங்கிகளிடமிருந்து பெற்ற கடனை முறைகேடாக மடைமாற்றியுள்ளதாக அமலாக்கத் துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்